புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, நமீபியாவுடன் மோதியது. இந்திய அணியில் உடல் நலக்குறைவு காரணமாக அபிஷேக் சர்மா களமிறங்கவில்லை.
அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். முகமது சிராஜ் நீக்கப்பட்டு ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ரூபன் டிரம்பல்மேன் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தை சாம்சன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
பென் ஷிகோங்கோ வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசிய சஞ்சு சாம்சன் கடைசி பந்தில் டீப் மிட்விக்கெட் திசையில் ஃபிளிக் செய்த போது லோரன் ஸ்டீன்காம்பிடம் கேட்ச் ஆனது. 8 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்சன், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து கமிறங்கிய திலக் வர்மா, ரூபன் டிரம்பல்மேன் வீசிய 5-வது ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார். ஜேஜே ஸ்மித் வீசிய 6-வது ஓவரில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 8-வது அரை சதத்தை கடந்தார். பவர்பிளேவில் இந்திய அணி 86 ரன்கள் குவித்தது.
மேக்ஸ் ஹெய்ங்கோ வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷன் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை அடித்தார். திலக் வர்மா தனது பங்குக்கு ஒரு பவுண்டரி விரட்டினார். மட்டையை சுழற்றிய இஷான் கிஷன் 24 பந்துகளில், 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் விளாசிய நிலையில் ஜெரார்டு எராஸ்மஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த 61 ரன்களில் இஷான் கிஷன் 7 ரன்களை மட்டுமே ஓடி எடுத்தார். மற்ற 54 ரன்களும் பவுண்டரி, சிக்ஸர்கள் வாயிலாக எடுத்திருந்தார்.
2-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன், திலக் வர்மா ஜோடி 79 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களமிங்கினார். 10 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 120 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில், 12 ரன்கள் எடுத்த நிலையில் பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் வீசிய பந்தை கிரீஸை விட்டு வெளியே வந்து விளாச முயன்ற போது ஸ்டெம்பிங்க் முறையில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து திலக் வர்மா 21 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஜெரார்டு எராஸ்மஸ் பந்தில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, நமீபியா பந்துவீச்சை பதம் பார்த்தார். பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் வீசிய 15-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசினார். ஷிவம் துபேவும் இந்த ஓவரில் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார்.
ஹர்திக் பாண்டியா
பென் ஷிகோங்கோ வீசிய அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். மட்டையை சுழற்றிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவரது 8-வது அரை சதமாக அமைந்தது.
அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஜெரார்டு எராஸ்மஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 18.2 ஓவர்களில் 205 இருந்தது. இதைத் தொடர்ந்து ஷிவம் துபே 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
அக்சர் படேல் 0, ரிங்கு சிங் 0, அர்ஷ்தீப் சிங் 2 ரன்களில் நடையை கட்டினர். 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. கடைசி 11 பந்துகளில் இந்திய அணி 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
நமீபியா அணி சார்பில் ஜெரார்டு எராஸ்மஸ் எராஸ்மஸ் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பென் ஷிகோங்கோ, ஜேஜே ஸ்மித், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
210 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா அணி 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லோரன் ஸ்டீன்காம்ப் 20, ஜான் ஃப்ரைலின்க் 22, கேப்டன் ஜெரார்டு எராஸ்மஸ் 18, ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் 13, ஜேன் கிரீன் 11 ரன்கள் சேர்த்தனர். ஜேஜே ஸ்மித் 0, மலான் க்ரூகர் 5, பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் 4, பென் ஷிகோங்கோ 0 ரன்களில் நடையை கட்டினர்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3, அக்சர் படேல் 2, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது. இந்த இரு வெற்றிகளின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியின் தொடர்ச்சியான 10-வது வெற்றியாக இது அமைந்தது. ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வானார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஒரே ஓவரில் 28 ரன்கள்
நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தொடக்க வீரர் இஷான் கிஷன், ஜே.ஜே.ஸ்மிட் வீசிய 6-வது ஓவரில் 28 ரன்களை விளாசினார். இந்த வகையில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். 2024-ல் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரில் 28 ரன்களை விளாசியிருந்தார். இந்த வகையில் 2007-ல் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் யுவராஜ் சிங் 36 ரன்களை விளாசியதே முதலிடத்தில் உள்ளது.
20 பந்துகளில் அரை சதம்
இஷான் கிஷன் 20 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் அவர், 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். யுவராஜ் சிங் 12 பந்துகளிலும் (2007), கே.எல்.ராகுல் 18 பந்துகளிலும் (2021), ரோஹித் சர்மா 19 பந்துகளிலும் (2024), யுவராஜ் சிங் 20 பந்துகளிலும் (2007) அரை சதம் விளாசி முதல் 4 இடங்களில் உள்ளனர்.
‘6 ஓவரில் 50’
டி20 ஆட்டத்தில் முதல் 6 ஓவர்களில் 50 ரன்களை 2-வது முறையாகக் கடந்துள்ளார் இஷான் கிஷன். இதே வகையான சாதனையை அபிஷேக் சர்மா 3 முறையும், ரோஹித் சர்மா 2 முறையும், கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா ஒரு முறையும் செய்துள்ளனர்.
அதிக வயதில் அறிமுகம்
டி20 உலகக் கோப்பையில் அதிக வயதில் அறிமுகமாகியுள்ள இந்திய வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் சஞ்சு சாம்சன் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் அறிமுகமான சஞ்சு சாம்சன் 31 ஆண்டு, 93 நாட்களை நிறைவு செய்துள்ளார். இந்த வகையில் அமித் மிஸ்ரா (31 ஆண்டு, 117 நாட்கள்) முதலிடத்திலும், சூர்யகுமார் யாதவ் (31 ஆண்டு, 40 நாட்கள்) 3-வது இடத்திலும், ஆசிஷ் நெஹ்ரா (31 ஆண்டு, 2 நாட்கள்) 4-வது இடத்திலும், லஷ்மிபதி பாலாஜி (30 ஆண்டு, 358 நாட்கள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.
47-வது முறையாக 200+ ஸ்கோர்
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 209 ரன்கள் குவித்தது. சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 47-வது முறையாகும். அதேவேளையில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 200 ரன்களை கடப்பது இது 4-வது முறையாகும்.