சென்னை: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் சூப்பர் 8 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான சிதான்ஷு கோடக் கூறியதாவது: உடல் நலம் பாதிக்கப்பட்ட பின்னர் அபிஷேக் சர்மாவிடம் உத்வேகம் இல்லை. ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர், சிறப்பாகவே இருந்தார்.
எனினும் தனிப்பட்ட வீரர் குறித்து அதிகம் சிந்திப்பதை நான் விரும்புவது இல்லை. தனிப்பட்ட வீரர் குறித்து நாங்கள் கவனம் செலுத்தினால் அது அவருக்கு அழுத்தத்தை உருவாக்கும். அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 80, 70, 90 ரன்களை விளாசும் போதும் 40, 50 பந்துகளில் 100 ரன்களை விளாசும் போதும் யாரும் அதை பற்றி விவாதிக்கவில்லை.
அவரை நல்ல மனநிலையில் வைத்திருப்பது எங்கள் வேலை. அவர் மீண்டும் பந்தை அடிக்க ஆரம்பித்தவுடன், பழைய அபிஷேக்கைப் பார்ப்பீர்கள். அடுத்த போட்டியில் அவர், அதைச் செய்வார் என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனினும் அது வெகு தொலைவில் இல்லை.
இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம். ஏனென்றால் 2 இடது கை வீரர்கள் தொடக்க வீரர்களாக உள்ளனர், மூன்றாவது இடத்திலும் இடது கை வீரர் உள்ளார். மேலும் எதிரணியினர் தொடக்கத்தில் பந்துவீச்சு சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துகின்றனர்.
தனிப்பட்ட முறையில் அதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் கடைசி ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தோம். இதனால் எந்த அணியாக இருந்தாலும் யோசிக்கவே செய்யும்.
நாங்கள் அணியை ஒருபோதும் முன்கூட்டியே முடிவு செய்வது இல்லை. மேலும் எங்களது திட்டங்களை வெளிப்படையாக கூறவும் முடியாது. ஆனால் ஆலோசனை செய்துள்ளோம். சஞ்சு சாம்சன், முதல் வலையில் பயிற்சி செய்தார். இதை அவர், அணியில் இடம் பெறுவதற்கான அறிகுறியாக கருதமுடியாது.
திலக் வர்மா பேட்டிங் குறித்தும் நாங்கள் கவலைப்படவில்லை. ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அவர், பேட்டிங் செய்கிறார். 34 முதல் 35 ரன்களை அவர், 30 அல்லது 32 பந்துகளில் சேர்க்கிறார். ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தால் அவர், அங்கிருந்து முன்னேற்றம் காண்பார். இவ்வாறு சிதான்ஷு கோடக் கூறினார்.