ஆஷஸ் தொடரில் அமர்க்களமாக வந்து இறங்கி ஒன்றும் செய்யாமல் உதை மேல் உதை வாங்கி 0-2 என்று தோல்வி கண்டுள்ள இங்கிலாந்து அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அவர்களின் புகழ்பெற்ற ‘பாஸ்பால்’ கடும் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் ஆளாகி வருகிறது. கோச் மெக்கல்லம் மீது விமர்சனங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது கூட இப்போது முடிந்து அவர் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஜெஃப்ரி பாய்காட், இங்கிலாந்தின் ஆட்டத்தை, பொறுப்பற்றது, குப்பைத்தனமாக உள்ளது என்று கடுமையாகச் சாடி வருகிறார். இப்போது அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியுமா என்றால் மிகமிகக் கடினமே. மைக்கேல் நேசர் என்ற பவுலர் சர்வதேச கிரிக்கெட்டை ஆடியே சில வருடங்கள் ஆகிறது, அவரிடம் 2-வது இன்னிங்சில் பிரிஸ்பனில் இங்கிலாந்து மடிந்தது.
பிரெண்டன் மெக்கல்லம், ‘அதிகமாக தயாரிப்பில் ஈடுபட்டோம்’ என்று கூறியதும் கடும் காமெடியாகி வருகிறது. ஏனெனில் நூஸா கடற்கரையில் பீர் கோப்பைகளுடன் இங்கிலாந்து வீரர்கள் காணப்படுவதை ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டு, ‘நூஸா கடற்கரையில் பாஸ்பால்’ என்று தலைப்பிட்டு கிண்டலடித்து வருகின்றன.
கடற்கரையில் பீர் அடித்துக் கொண்டு இஷ்டத்திற்கு ஊர்சுற்றுவதைத்தான் பிரெண்டன் மெக்கல்லம் ‘கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு தயாரித்துக் கொள்கிறோம்’ என்கிறாரா என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாகச் சாடி வருகின்றன. ஒரு பத்திரிகை, ‘sun's out, Runs out' என்று கேலி செய்துள்ளது. இன்னொரு ஊடகம் “நூஸாவில் பாஸ்பாலா” என்று கிண்டல் வரிகளை சுழற்றுகிறது.
முன்னாள் பவுலர் ஸ்டீவ் ஹார்மிசன், ‘மெக்கல்லத்தின் கீழ் இங்கிலாந்து அணிப் பொறுப்புகளைத் துறந்து வருகிறது. அவர்கள் தங்களுக்குள்ளாகவே புழங்கும் குரூப் ஆக உள்ளனர். வெளியிலிருந்து என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை என்று சாடியுள்ளார்.
மேலும், ஹார்மிசன் சாடுகையில், ‘பிரெண்டன் மெக்கல்லம் டாப் 7 பேட்டர்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார். அதாவது தவறிலிருந்து திருத்திக் கொள்ள முடியாத அளவுக்கு மூளைச் சலவை செய்து வைத்துள்ளார்” என்கிறார்.