துபாய்: ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருவதால் பஹ்ரைன், சவுதி அரேபியாவில் நடைபெறவிருந்த ஃபார்முலா-1 கார்ப் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரபல கார்ப் பந்தயமான ஃபார்முலா-1 கார்ப்பந்தயம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 24 சுற்றுகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான முதல் சுற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. தற்போது சீனாவில் நடந்து வரும் 2-வது சுற்றின் இறுதிப் போட்டி நேற்று நடந்தேறியது 3-வது சுற்று போட்டி வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஜப்பானில் நடைபெறவுள்ளது.
4-வது சுற்று பஹ்ரைனில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், 5-வது சுற்று சவுதி அரேபியாவில் ஏப்ரல் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக பஹ்ரைன், சவுதி அரேபியாவில் நடைபெற இருந்த ஃபார்முலா-1 கிராண்ட்பிரீ சுற்றுப் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக ஃபார்முலா-1 நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான போரில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பஹ்ரைன், சவுதி அரேபியா மீது ஈரான் தொடர்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசித் தாக்கி வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பஹ்ரைன், சவுதி அரேபியாவில் ஃபார்முலா-1 கார்பந்தயங்கள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.