தரம்சாலா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது. ஆனால் கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.
13 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடரின் முதல் பாதியில், மிகச்சிறந்த ஃபார்மில் இருந்த பேட்டிங் வரிசை, பந்துவீச்சு துறையில் இருந்த பலவீனங்களை மறைத்தது. ஆனால் சமீபகாலமாக சவாலான இலக்கை நிர்ணயித்த பிறகும் கூட மோசமான பந்துவீச்சு காரணமாக வெற்றியை வசப்படுத்த முடியாத சூழ்நிலை பஞ்சாப் அணிக்கு உருவாகி உள்ளது.
கடைசியாக டெல்லி அணிக்கு எதிராக தரம்சாலா ஆடுகளத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 210 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்து இருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த அந்த ஆடுகளத்தில் கடைசி ஐந்து ஓவர்களில் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களால் பந்துகளைச் சரியான நீளத்தில் வீச முடியவில்லை. அர்ஷ்தீப் சிங்கை உள்ளடக்கிய அந்த அணியின் வேகப்பந்து வீச்சு துறை இந்தத் தொடரில் உள்ள 10 அணிகளில் அதிகமான ரன்களை தாரைவார்த்துள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங் கூட்டணி புதிய பந்தில் நிலையான செயல் திறனை வழங்கியது. ஆனால் தற்போது லாக்கி பெர்குசன் வருகையால் அந்தச் சமநிலை குலைந்துள்ளது; பெர்குசன் பொதுவாக மிடில் மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களிலேயே சிறப்பாக செயல்படக்கூடியவர். கடந்த போட்டியில் பென் டுவார்ஷூயிஸை சேர்த்ததன் மூலம் 3 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கினார்கள். ஆனால் இவர்கள் அதிக ரன்களை தாரை வார்த்தனர்.
இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் நடப்பு சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் பெரும்பாலானவற்றில் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி சுழற்பந்து வீச்சை பயன்படுத்தவில்லை. இதுவும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இன்றைய ஆட்டத்தில் யுவேந்தி சாஹல் களமிறக்கப்படக்கூடும். பேட்டிங்கைப் பொறுத்தவரை டாப் ஆர்டரில் பிரியன்ஷ் ஆர்யா அதிரடி தொடக்கம் கொடுத்து வருகிறார்.
அதேவேளையில் கடந்த சில ஆட்டங்களாக பிரப்சிம்ரன் சிங்கிடம் இருந்து பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்திறன் வெளிப்படவில்லை. இதனால் அவர், மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் 36 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும். ஃபீல்டிங்கிலும் பஞ்சாப் அணி மிகப்பெரிய முன்னேற்றம் காணவேண்டியது அவசியமாகும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி 11 ஆட்டங்களில் 3 வெற்றி, 8 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஆறுதல் வெற்றிகளை பெறுவதில் அந்த அணி கவனம் செலுத்தக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் நேற்று மழை காரணமாக இரு அணிகளின் பயிற்சியும் பாதிக்கப்பட்டு இருந்தது.