மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் 208 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற நான்கு வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள போதிலும் அவர்களிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்படாதது அணியை பலவீனமாக்கி உள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் 97 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதேவேளையில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். சூர்யகுமார் யாதவ் 110 ரன்களே எடுத்துள்ளார்.
திலக் வர்மா, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தார். அவரது சிறப்பான ஆட்டம் மும்பை அணியின் தொடர்ச்சியான 4 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மட்டுமே உதவியது. இருப்பினும், சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணியின் மிகப்பெரிய தோல்வி, தடுமாறிக் கொண்டிருக்கும் அவர்களின் இந்த சீசனை மீண்டும் சரிவுக்குள் தள்ளியுள்ளது.
அதே நேரம் ரோஹித் சர்மா இல்லாதது பெரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது. கடந்த 2 போட்டிகளில் டேனிஷ் மாலேவாரால் (2, 0) அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா என்பது நேற்று மாலை வரை உறுதிப்படுத்தப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஜஸ்பிரீத் பும்ரா 2 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
வழக்கமாக விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக மிடில்-ஓவர்களிலும், எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதற்காக இறுதிக்கட்ட ஓவர்களிலும் பயன்படுத்தப்படும் பும்ரா, கடந்த இரண்டு போட்டிகளாக தொடக்க ஓவர்களை வீசினார். ஆனால் அதற்கும் பெரிய அளவில் பலன்கிடைக்கவில்லை. டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர் உள்ளிட்ட மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுமே பவர்பிளேவில் விக்கெட்களை வீழ்த்த சிரமப்பட்டு வருகின்றனர்.
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஷ்வனி குமார் 4 விக்கெட்களை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த முடியாமல் போனது. காயமடைந்த மிட்செல் சான்ட்னருக்குப் பதிலாக கேசவ் மகாராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும் இன்றைய ஆட்டத்தில் ஆல்ரவுண்டரானவில் ஜாக்ஸிற்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அவர், சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக அந்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 229 ரன்கள் இலக்கு அமைக்கப்பட்டிருந்த அந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 31 பந்துகளில், 74 ரன்களும் அபிஷேக் சர்மா 29 பந்துகளில் 57 ரன்களும் விளாசி அணியில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.
அபிஷேக் சர்மா நடப்பு சீசனில் இதுவரை ஒரு சதம், 3 அரை சதங்கள் என 54.28 சராசரி மற்றும் 212.29 ஸ்டிரைக் ரேட்டுடன் 380 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஹெய்ன்ரிச் கிளாசன் 349 ரன்களும், இஷான் கிஷன் 312 ரன்களும் வேட்டையாடி உள்ளனர். தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து மட்டுமே பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. அவர், இதுவரை 186 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் கணிசமான ரன்களை சேர்ப்பதில் அவர், கவனம் செலுத்தக்கூடும்.