விளையாட்டு

பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை - இன்று சிஎஸ்கேவுடன் சேப்பாக்கத்தில் மோதல்

பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஐபிஎல் வரலாற்​றில் மிக​வும் வெற்​றிகர​மாக திகழ்ந்த மும்பை இந்தி​யன்​ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணி​களும், நடப்பு சீசனில் தடு​மாறி வரு​கின்​றன. ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 5 தோல்விகளு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக சிஎஸ்கே அணி, குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்திருந்தது.

நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி​யின் பேட்​டிங் சீரற்​ற​தாக உள்​ளது, குறிப்​பாக மிடில் ஓவர்​களில் தடு​மாற்​றம் காணப்​படு​கிறது. ஒரு போட்​டி​யில் அபார​மாக விளை​யாடு​வதும், அடுத்த போட்​டி​யில் அப்​படியே சரிவதும் அந்த அணி​யின் பிளே-ஆஃப் வாய்ப்​பு​களை கேள்விக்​குறி​யாக்​கி​யுள்​ளது. அணி​யின் ஒட்​டுமொத்த பேட்டிங்கும் சஞ்சு சாம்​சனை மட்​டுமே நம்பி உள்​ளது.

அவர், விரை​விலேயே ஆட்​ட​மிழந்​தால் பொறுப்​புடன் விளை​யாடி அணியை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​லக்​கூடிய வீரர்​கள் இல்​லை. மேலும் காயம் காரண​மாக ஆயுஷ் மாத்ரே விலகி உள்ளது நடு​வரிசை பேட்​டிங்​கை​யும் வெகு​வாக பாதித்​துள்​ளது. கடந்த சீசன்​களில் அதிரடி​யாக விளை​யாடிய ஷிவம் துபே, டெவால்ட் பிரே​விஸ் ஆகியோரிடம் இருந்து இது​வரை தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்பட​வில்​லை.

சர்ஃப​ராஸ் கான் தனக்கு கிடைக்​கும் வாய்ப்​பு​களை சரிவர பயன்​படுத்​திக்​கொள்​ள​வில்​லை. அவசர கதி​யில் விளை​யாடி ஆட்டமிழப்​பதை வாடிக்​கை​யாக வைத்​துள்​ளார். இதே நிலை​தான் கார்த்​திக் சர்​மாவுக்​கும். உள்​ளூர் போட்​டிகளில் சிறப்​பாக விளையாடிய அவரால் ஐபிஎல் தொடரில் எதிர்​பார்த்த அளவுக்கு உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்த முடிய​வில்​லை. கடந்த ஆட்​டத்​தில் களமிறக்​கப்​பட்ட உர்​வில் படேல் 4 ரன்​களில் ஆட்டமிழந்து ஏமாற்​றம் அளித்​தார்.

இதுஒரு​புறம் இருக்க ருது​ராஜ் கெய்க்​வாட் பார்​முக்கு திரும்பி இருப்​பது நம்​பிக்கை அளிக்​கக்​கூடும். குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 60 பந்​துகளில் 74 ரன்​கள் சேர்த்த அவரிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். 2 சதங்​கள் அடித்​துள்ள சஞ்சு சாம்​சனும் மட்​டையை சுழற்​றக்​கூடும். பந்​து​வீச்​சில் ஜேமி ஓவர்​டன், அன்​ஷுல் கம்​போஜ், அகீல் ஹோசைன், நூர் அகமது ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடும்.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 6 தோல்வி​களு​டன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்​தில் உள்​ளது. மும்பை அணி​யும் இந்த சீசனில் நிலை​யற்ற ஆட்​டத்​தையே வெளிப்​படுத்தி வருகிறது. அவர்​களின் டாப்​-ஆர்​டர் பேட்​டர்​கள் அவ்​வப்​போது சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி​னாலும், பலவீன​மான மிடில்​-ஆர்​டர் ஏமாற்​றத்​தையே அளித்​துள்​ளது.

சூர்​யகு​மார் யாதவ் மற்​றும் திலக் வர்மா போன்ற வீரர்​கள் சில போட்​டிகளில் கைகொடுத்​தா​லும், ஒட்​டுமொத்​த​மாக மிடில்​-ஆர்டர் சீராக ரன் குவிக்​கத் தவறி​விட்​டது. இது பினிஷிங் செய்​யும் போது பெரும் அழுத்​தத்தை உரு​வாக்​கு​கிறது. இதே​போன்று பந்து வீச்​சில் இக்​கட்​டான நேரங்​களில் ரன்​களைக் கட்​டுப்​படுத்​தவோ அல்​லது நிர்​ண​யித்த இலக்​கைத் தக்​கவைப்​ப​திலோ பந்​து​வீச்சாளர்​கள் திணறி வரு​கின்​றனர்.

மும்பை அணி தனது கடைசி ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது. அந்த ஆட்டத்​தில் மும்பை அணி 243 ரன்​களை குவித்த போதி​லும் வெற்றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது. அந்​தப் போட்​டி​யில் மும்பை அணி​யின் பந்​து​வீச்​சுப் பிரி​வின் பலவீனங்​கள் அப்பட்டமாக வெளிப்​பட்​டன. ஜஸ்​பிரீத் பும்ரா 4 ஓவர்​களை வீசி விக்​கெட் ஏது​மின்றி 54 ரன்​களை வாரி வழங்​கி​னார். அஷ்வனி குமார் 2 ஓவர்​களில் 41 ரன்​களை விட்​டுக்​கொடுத்​தார்.

புள்​ளி​கள் பட்​டியலில் 9-வது இடத்​தில் இருக்​கும் மும்பை அணி பிளே-ஆஃப் சுற்​றுக்​குத் தகுதி பெற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 6 போட்​டிகளி​லும் கட்​டா​யம் வெற்றி பெற்​றாக வேண்​டும். இதில் ஒரு போட்​டி​யில் தோற்​றால் கூட, மும்பை இந்​தி​யன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெறு​வதற்​கான வாய்ப்​புக்​காக ரன் ரேட்​டை​யும், மற்ற அணி​களின் வெற்​றி, தோல்வி முடிவு​களை​யும் பெரிதும் சார்ந்​திருக்க வேண்டிய நிலைக்​குத் தள்​ளப்​படும்.

நடப்பு சீசனில் சிஎஸ்கே - மும்பை அணி​கள் 2-வது முறை​யாக மோத உள்​ளன. கடந்த ஏப்​ரல் 23-ம் தேதி மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்​தி​யாசத்​தில் மும்பை அணியை வீழ்த்​தி​யிருந்​தது. இந்த ஆட்​டத்​தில் 208 ரன்​கள் இலக்கை துரத்​திய மும்பை அணி 104 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து இருந்​தது. இந்​த தோல்விக்​கு இன்றைய ஆட்​டத்​தில்​ பதிலடி கொடுக்​க ​மும்​பை அணி ​முயற்சிக்கக்​கூடும்.

சேப்பாக்கத்தில்...

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை அணிகள் 9 முறை மோதி உள்ளன. இதில் மும்பை அணி 5 ஆட்டங்களிலும், சிஎஸ்கே அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. தற்போது 10-வது முறையாக இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோத உள்ளன.

SCROLL FOR NEXT