விளையாட்டு

சூரியவன்ஷி அசத்தல்: லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!

டெக்ஸ்டர்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 தொடரின் 64-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, மிட்செல் மார்ஷின் அதிரடியான 96 ரன்கள் (5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) மற்றும் ஜோஷ் இங்கிலிஸின் 60 ரன்கள் (3 சிக்ஸர்கள்) ஆகியவற்றின் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்தது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் புஞ்சா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, இளம் தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி அபாரமாக ஆடி வெறும் 38 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார். 

கேப்டன் ஜெய்ஸ்வால் 43 ரன்களும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரல் 53 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் டொனாவன் ஃபெரீரா சிக்ஸர் அடித்து 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். 

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறி தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

SCROLL FOR NEXT