தரம்சாலா: ஐபிஎல் 2026 தொடரின் 58-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 57 ரன்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்தார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 11 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், மும்பை அணியின் ஷர்துல் தாக்கூர் தனது அபாரமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பஞ்சாப் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். அஸ்மத்துல்லா ஒமர்சாய் இறுதி நேரத்தில் 17 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்.
201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், திலக் வர்மா அசுர வேகத்தில் ரன்களைக் குவித்தார். அவர் வெறும் 33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் (6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். ரியான் ரிக்கல்டன் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சேவியர் பார்ட்லெட் வீசிய அந்த ஓவரில் வில் ஜாக்ஸ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஒரு பந்து மீதமிருக்கையிலேயே மும்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய திலக் வர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடர்ச்சியான 5-வது தோல்வியைச் சந்தித்துள்ளது