லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது.
இம்முறை அந்த அணி முழுமையான உடற்தகுதியை கொண்ட வீரர்களை உள்ளடக்கியதாக உள்ளது. அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, அன்ரிச் நோர்க்கியா வேகப்பந்து வீச்சுத்துறையில் பலம் சேர்க்கக்கூடும். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவும் முழு உடற்தகுதியுடன் களமிறங்குகிறார்.
மோஷின் கான், பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் வேகப்பந்து வீச்சுத்துறையில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சில் திக்வேஷ் ராதி, மணிமாறன் சித்தார்த் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ் மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள்.
கடந்த ஆண்டில் 4-வது இடத்தில் களமிறங்கிய ரிஷப் பந்த் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் அவர், இம்முறை 3-வது இடத்தில் களமிறங்கக்கூடும். இது நிகழும் பட்சத்தில் நிகோலஸ் பூரன் 4-வது இடத்தில் விளையாடக்கூடும். டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல் தலைமையில் களமிறங்குகிறது.
அந்த அணி கடந்த சீசனில் சரியான அணிச் சேர்க்கையை கண்டுபிடிக்க முடியாமல் தொடக்க வரிசையில் 7 ஜோடிகளை பயன்படுத்தி இருந்தது. இம்முறையும் அந்த அணிக்கு இந்த சிக்கல் ஏற்படக்கூடும். கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவது ஏறக்குறைய உறுதியாக உள்ள நிலையில் அவருடன் எந்த பேட்ஸ்மேன் களமிறங்குவார் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை.
பிரித்வி ஷா, அபிஷேக் போரல், பதும் நிஷங்கா ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுவரிசையில் டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பலம் சேர்க்கக்கூடும். நித்திஷ் ராணா, அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகாம், கருண் நாயர் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
வேகப்பந்து வீச்சு துறையில் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க் இன்னும் அணியுடன் இணையவில்லை. இது டெல்லி அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் லுங்கி நிகிடி, கைல் ஜேமிசன், நடராஜன், முகேஷ் குமார், ஆக்கிப் நபி தார், இலங்கையின் துஷ்மந்தா சமீரா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் அக்சர் படேலுடன், குல்தீப் யாதவ் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.