விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026

டெக்ஸ்டர்

அகமதாபாத்: ஐபிஎல் 2026 தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 

நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 3) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர்.

சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 ரன்கள் (3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து அணியை மீட்டெடுத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் தனது பங்கிற்கு 40 ரன்கள் சேர்த்தார். எனினும், குஜராத் அணியின் ஜேசன் ஹோல்டர் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பஞ்சாப் அணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.  

164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்குச் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்தது. சாய் சுதர்சன் 41 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 23 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 26 ரன்கள் சேர்த்தார்.  

இறுதி ஓவர்களில் சில விக்கெட்டுகள் சரிந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பஞ்சாப் தரப்பில் விஜய் குமார் வைஷாக் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முட்டுக்கட்டை போட்டனர். இருப்பினும், குஜராத் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தன்வசப்படுத்தியது. 

SCROLL FOR NEXT