விளையாட்டு

ஐபிஎல் 2026: லக்னோவுக்கு முதல் வெற்றி

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது.

அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்​தில் ஷார்ட் தேர்டு மேன் திசை​யில் நின்ற மணி​மாறன் சித்​தார்த்​தின் அபாரமான கேட்ச் காரண​மாக வெளி​யேறி​னார். ஷமி தனது அடுத்த ஓவரில் டிரா​விஸ் ஹெட்டை (7) ஆட்டமிழக்கச் செய்​தார். இதன் பின்​னர் பிரின்ஸ் யாதவ் பந்​தில் இஷான் கிஷன் (1) போல்​டா​னார்.பவர்​பிளே​வில் ஹைத​ரா​பாத் அணி 22 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது.

          

இதையடுத்து களமிறங்​கிய லியாம் லிவிங்​ஸ்​டன் 14 ரன்கள் எடுத்த நிலை​யில் திக்​வேஷ் ராதி பந்​தில் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்​டி​னார். 7.1 ஓவர்களில் ஹைத​ரா​பாத் அணி 26 ரன்​களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்​தது. இதன் பின்​னர் ஹெய்ன்ரிச் கிளாசனுடன் இணைந்த நித்​திஷ் குமார் ரெட்டி அதிரடி​யாக விளை​யாடி​னார்.

நித்​திஷ் குமார் ரெட்டி 33 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்டரி​களு​டன் 56 ரன்​களும், ஹெய்ன்​ரிச் கிளாசன் 41 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 62 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 63 பந்​துகளில் 116 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து ஹர்ஷ் துபே 0, ஷிவாங்க் குமார் 5, ஹர்​ஷால் படேல் 4 ரன்​களில் நடையை கட்​டினர். 20 ஓவர்​கள் முடி​வில் ஹைத​ரா​பாத் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 156 ரன்​கள் எடுத்​தது.

லக்னோ அணி​யின் பந்​து​வீச்சில் முகமது ஷமி 4 ஓவர்​களை வீசி 9 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 2 விக்கெட்​களை வீழ்த்​தி​னார். 157 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த லக்னோ அணி 19.5 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்புக்கு 160 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. கேப்​டன் ரிஷப் பந்த் 50 பந்​துகளில், 9 பவுண்​டரி​களு​டன் 68 ரன்களும், முகுல் சவுத்ரி 2 ரன்​களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்​தனர்.

முன்​ன​தாக தொடக்க வீரர்​களான எய்​டன் மார்க்​ரம் 27 பந்துகளில், 2 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், மிட்​செல் மார்ஷ் 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 14 ரன்களும் சேர்த்து ஆட்​ட​மிழந்தனர். ஆயுஷ் பதோனி 12, நிகோலஸ் பூரன் 1, அப்​துல் சமத் 16 ரன்​களில் வெளியேறினர். ஜெயதேவ் உனத்​கட் வீசிய கடைசி ஓவரில் லக்னோ அணி​யின் வெற்​றிக்கு 9 ரன்​கள் தேவை​யாக இருந்த நிலை​யில் முதல் 2 பந்​துகளை​யும் ரிஷப் பந்த் பவுண்​டரிக்கு விரட்​டி​னார்.

அடுத்த 2 பந்​துகளி​லும் ரன்​கள் சேர்க்​கப்​பட​வில்​லை. தொடர்ந்து 5-வது பந்தை ரிஷப் பந்த் பவுண்​டரிக்கு விரட்ட லக்னோ அணி வெற்​றியை வசப்​படுத்​தி​யது. 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இது முதல் வெற்​றி​யாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

SCROLL FOR NEXT