கொல்கத்தா: இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான கால்பந்து ஆட்டம் இளம் இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரேசில் அணியின் முன்னாள் வீரர் காஃபு (Cafu) தெரிவித்துள்ளார்.
“உலக தரவரிசையின் படி பார்த்தால் பிரேசில் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசம் இருக்கும். ஆனால், கால்பந்து விளையாட்டு இப்போது நவீன வளர்ச்சி கண்டுள்ளது. அனைவரும் இன்று சரி சமமான வகையில் விளையாடுகின்றனர். அதை கடந்த உலகக் கோப்பை தொடரில் நாம் பார்த்தோம்.
குரசாவோ, கேப் வெர்டே உள்ளிட்ட அணிகள் அதற்கு சிறந்த உதாரணம். சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள அணிகளுக்கு இந்த அணிகள் சவால் கொடுத்தன.
இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சிறந்த ஆட்டமாக அமையும் என்று நம்புவோம். நிச்சயம் இந்திய அணி மற்றும் ரசிகர்களுக்கு இது பலன் தரும். உலகக் கோப்பை தொடரில் சில விரிவாக்கத்தை ஃபிபா மேற்கொண்டுள்ளது. அது இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது என கருதுகிறேன்.
குழந்தைகள் கால்பந்து விளையாட இந்திய தேசம் ஊக்குவிக்க வேண்டும். அது குறித்து விளம்பரம் மற்றும் பள்ளி அளவில் இதை மேற்கொள்ள வேண்டும். நிச்சயம் இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான ஆட்டம் இளம் இந்தியர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமையும் என நம்புகிறேன். தென் கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கால்பந்து விளையாட்டில் வளர்ந்து வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2002-ல் காஃபு தலைமையில் பிரேசில் அணி உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 24 ஆண்டுகளாக அந்த அணி கோப்பை வெல்லாமல் உள்ளது.