புதுடெல்லி: ஃபிடே செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் செப்டம்பர் 16 முதல் 27 வரை உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரு பிரிவிலும் இந்தியா நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்குகிறது. கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தன.
இம்முறை ஆடவர் அணியில் உலக சாம்பியனான டி.குகேஷுடன், சமீபத்தில் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆர்.பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, நிஹால் சரின், விதித் குஜராத்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நிஹால் சரின் மட்டுமே புதிதாக இணைந்துள்ளார்.
மகளிர் அணியில் ஹோனேரு ஹம்பி, கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளரான ஆர்.வைஷாலி, உலக கோப்பை வெற்றியாளர் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சவிதா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் 2024-ல் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் ஹோனேரு ஹம்பி, சவிதா ஆகியோர் இடம் பெற்றிருக்கவில்லை.