படங்கள்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 44.2 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி 131 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 56 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 23 ரன்களை வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 219 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தனது 2-வது சதத்தை விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 86 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 110 ரன்களும் ஸ்ரேயஸ் ஐயர் 19 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற இந்திய அணியினர் கோப்பையுடன் கொடுத்த உற்சாக போஸ்.
முன்னதாக ரோஹித் சர்மா 79 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் முகமது நபி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஜோடி 22.5 ஓவர்களில் 170 ரன்கள் குவித்தது.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.
பிரசித் கிருஷ்ணா சாதனை
* ஆப்கானிஸ்தான் அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா கைப் பற்றினார்.
இதன் மூலம் எதிரணியின் முதல் 5 பேட்ஸ்களை ஆட்டமிழக்கச் செய்த 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பிரசித் கிருஷ்ணா பெற்றார். இந்த வகை சாதனையை 1994-ல் இலங்கைக்கு எதிராக மனோஜ் பிரபாகரும், 2023-ல் நியூஸிலாந்துக்கு எதிராக முகமது ஷமியும் நிகழ்த்தியிருந்தனர்.
சதம் அடித்த மகிழ்ச்சியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
* சேப்பாக்கத்தில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியாவின் பிரசித் கிருஷ்ணா 23 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். சென்னை ஆடுகளத்தில் இது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.
இதற்கு முன்னர் 2011-ல் இந்தியாவுக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகளின் ரவி ராம்பால் 51 ரன்களை வழங்கி 5 விக்கெட்கள் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது.