தங்கம் வென்ற இந்தியாவின் திலீப்
சென்னை: நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் திலீப் காவித், பாரா 100 மீட்டர் (டி47 பிரிவு) ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் இந்தியாவின் முகமது பாசில் வெள்ளி வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியா இதுவரை 15 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியில் தற்போது 8-வது இடத்தில் உள்ளது இந்தியா.
இந்திய நேரப்படி இன்று (ஜூலை 30) அதிகாலை 1.30 மணி அளவில் ஆடவருக்கான பாரா 100 மீட்டர் டி47 பிரிவு ஓட்டத்தின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முகமது பாசில் மற்றும் திலீப் பங்கேற்றனர்.
பந்தய தூரத்தை 10.71 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார் திலீப். அதன் மூலம் அவர் தங்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கமாக இது அமைந்தது. முன்னதாக, பளுதூக்குதலில் மீராபாய் சானு மற்றும் பாரா குண்டு எறிதலில் ஷர்மிளா தன்கர் ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர்.
இதே பாரா 100 மீட்டர் டி47 பிரிவு ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10.83 விநாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் முகமது பாசில் வெள்ளி வென்றார். இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் வெண்கலமும் வென்றனர்.
முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி
நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், ஆடவர் பிரிவில் வெள்ளி வென்றார். 27 வயதான அவர், 8.09 மீட்டர் நீளம் தாண்டியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார். பர்மிங்காம் (2022) காமன்வெல்த் விளையாட்டு போட்டியை தொடர்ந்து கிளாஸ்கோவிலும் அவர் வெள்ளி வென்றுள்ளார்.
ஜமைக்காவின் கெயில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அவரை காட்டிலும் 0.6 மீட்டர் மட்டுமே முரளி ஸ்ரீசங்கர் பின்தங்கி இருந்தார். ஸ்காட்லாந்தை சேர்ந்த ஸ்டீபன் மெக்கன்சி வெண்கலம் வென்றார்.