பிரனாய் | கோப்புப்படம்
புதுடெல்லி: இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 32-வது வயதான இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்டைச் சேர்ந்த எம்.தருணை எதிர்த்து விளையாடினார்.
இதில் ஸ்ரீகாந்த் 15-21, 21-6, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதேவேளையில் அனுபவம் வாய்ந்த ஹெச்.எஸ்.பிரனாய், கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த ஹாங் காங்கின் லீ சியூக் யியுயை 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இடது கை வீராங்கனையான இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சீன தைபேவின் பை யூ போ-வை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் தன்வி ஷர்மா போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யியை எதிர்த்து விளையாடினார்.
முதல் செட்டில் கடுமையாக போராடிய தன்வி சர்மா 20-22 என இழந்தார். எனினும் இதில் இருந்து மீண்டு வந்து அடுத்த செட்டை 21-18 என கைப்பற்றினார். ஆனால் முடிவை தீர்மானித்த கடைசி செட்டை தன்வி சர்மா 13-21 என பறிகொடுத்தார். முடிவில் ஒரு மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் தன்வி சர்மா 20-22, 21-18, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 22-20, 12-21, 15-21 என்ற செட் கணக்கில் வியட்நாமின் துய் லின் நுயென்னிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.