ராய்ப்பூர்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 ஆட்டம் ராய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நாக்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்திருந்தது. அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 84 ரன்களும் ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்களும் விளாசியிருந்தனர்.
239 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியால் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் ராய்ப்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு இருந்தது. அபிஷேக் சர்மா தொடக்க பேட்டிங்கிலும், ரிங்கு சிங் இறுதிக்கட்ட ஓவர்களிலும் அதிரடியாக செயல்பட்டு இருந்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். மேலும் டி 20 உலகக் கோப்பை நெருங்குவதால் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரும் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்துவதில் முனைப்பு காட்டக்கூடும். இவர்கள் இருவருமே முதல் போட்டியை சிறந்த முறையில் தொடங்கினர். ஆனால் எளிதாக தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இதனால் 2-வது ஆட்டத்தில் இருவரும் கவனமுடன் செயல்பட முயற்சிக்கக்கூடும். 8-வது வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் டாப் ஆர்டரில் இந்திய அணியின் வீரர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் மட்டையை சுழற்றுவது பலத்தை அதிகரித்துள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தது அவரது நம்பிக்கையை அதிகரிக்கக்கூடும்.
ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் ஆகியோரும் சிறந்த பார்மில் இருப்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும். பந்துவீச்சில் தொடக்க ஓவர்களில் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் விக்கெட்களை வீழ்த்துவது பலம் சேர்ப்பதாக உள்ளது.
பவர்பிளேவுக்கு பிறகு ஜஸ்பிரீத் பும்ராவும், நடு ஓவர்களில் வருண் சக்ரவர்த்தியும் நேர்த்தியாக செயல்பட்டு நம்பிக்கை அளிப்பவர்களாக திகழ்கின்றனர். ஷிவம் துபேவின் வேகம் குறைந்த பந்துவீச்சும் கைகொடுத்து வருகிறது.
நாக்பூர் போட்டியில் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு துறை கடும் அழுத்தத்தை சந்தித்து இருந்தது. அதிலும் கடைசி ஓவரை வீசிய டேரில் மிட்செல் 21 ரன்களை தாரை வார்த்திருந்தார். இது ஆட்டத்தின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஜேக்கப் ஃடபியை தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியிருந்தனர்.
இதனால் இன்றைய ஆட்டத்தில் அந்த அணி பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் 78 ரன்கள் விளாசிய கிளென் பிலிப்ஸ் மீண்டும் ஒரு முறை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.