மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட நிலையில் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.
2010, 2022-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற 3 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்திருந்தது. தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்து இருந்தது.
சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. டாப் ஆர்டர் பேட்டர்கள் மூவரும் இடதுகை வீரர்களாக இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் கொண்டுவரப்பட்டார்.
இதன் மூலம் டாப் ஆர்டரில் தொடர்ந்த வலதுகை இடதுகை காம்பினேஷன் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் இந்திய அணியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கால் இறுதி போட்டி போன்று அமைந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் கடைசி வரை களத்தில் நின்று 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார்.
எந்த ஒரு கட்டத்திலும் அவசரகதியுடன் மட்டையை சுழற்றாமல் கடைசி வரை பொறுமையாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கோட்டை கடப்பதற்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். லீக் ஆட்டங்களில் அதிரடி காட்டிய இஷான் கிஷன் சூப்பர் 8 சுற்றில் ஏமாற்றம் அளித்தார்.
இதேபோன்று தடுமாறிவரும் அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரை சதம் அடித்திருந்தார். ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் விரைவுகதியில் விளையாடி 10 ரன்களில் வெளியேறியிருந்தார். இவர்கள் இருவரும் மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
திலக் வர்மா, ஷிவம் துபே ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும். பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஓவருக்கு சராசரியாக தலா 10 ரன்களுக்கு மேல் தாரை வார்த்திருந்தனர்.
அக்சர் படேல் ஓவருக்கு சராசரியாக 8.80 ரன்களையும் ஜஸ்பிரீத் பும்ரா சராசரியாக 9 ரன்களையும் வழங்கியிருந்தனர். இதனால் பந்துவீச்சு திட்டங்களில் இந்திய அணி ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும். அக்சர் படேல் அல்லது வருண் சக்ரவர்த்தி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் நடுவரிசை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூட்டணி பலமாக உள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களுக்கு எதிராக இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட திட்டங்கள் வகுக்கக்கூடும். ஜோப்ரா ஆச்சர் ‘ஷார்ட் பால்’ டெக்னிக்கை பயன்படுத்தி சஞ்சு சாம்சனுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
ஏனெனில் கடந்த காலங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டங்களில் உடலை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளில் சஞ்சு சாம்சன் தடுமாறி உள்ளார். அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்த பவர்பிளேவில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸை இங்கிலாந்து அணி பயன்படுத்தக்கூடும். இடது கை சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாவ்சன், மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷித் ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கக்கூடும்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டாப் ஆர்டர் வலுவாக இல்லை. பில் சால்ட், ஜாஸ் பட்லர் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. பில் சால்ட் 7 ஆட்டங்களில் 125 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஜாஸ் பட்லர் 62 ரன்களே சேர்த்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 26 ஆக உள்ளது. இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஜாஸ் பட்லர் சீராக ரன்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்தக்கூடும். மேலும் அவருக்கு ஐபிஎல் அனுபவங்கள் உதவக்கூடும்.
ஒரு சதம், அரை சதத்துடன் 228 ரன்கள் சேர்த்துள்ள ஹாரி புரூக், 191 ரன்கள் எடுத்துள்ள வில் ஜாக்ஸ் ஆகியோருடன் ஜேக்கப் பெத்தேல், சேம் கரண், டாம் பேன்டன் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சு துறைக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
மும்பை ஹீரோக்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி போட்டியையொட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோர் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்த மைதானத்தில் அதிக அளவிலான ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். இதனால் இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சிக்கலில் வருண் சக்ரவர்த்தி
மும்பை வான்கடே மைதானத்தின் எல்லைக்கோடுகள் சிறியவை என்பதால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் சிறிது தவறான லென்த்தில் பந்துவீசினாலும் அது பாதகமாக அமைந்துவிடும்.
தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டங்களில் வருண் சக்கரவர்த்தி அதிக அளவிலான ரன்களை தாரை வார்த்திருந்தார். இதனால் அவர், லைன் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கடைசி 5 ஓவரில் கவனம்
நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இறுதிக்கட்ட ஓவர்களில் இந்திய அணி அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களி இந்திய அணி 75 ரன்ளை தாரை வார்த்து இருந்தது. இதனால் இந்த காலக்கட்ட ஓவர்களில் இந்திய அணி கூடுதல் கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
பயன்படுத்தப்பட்ட ஆடுகளம்
நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 2-வது முறையாக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளது. கடந்த மாதம் லீக் சுற்றில் இங்கு அமெரிக்காவுடன் விளையாடிய இந்திய அணி ஷாட்லிவான் சால்விக்கின் மிதவேகப்பந்து வீச்சில் தடுமாறியிருந்தது.
தற்போது அரை இறுதி போட்டிக்கு பயன்படுத்தப்பட உள்ள ஆடுகளத்தில் ஏற்கெனவே 2 ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன. இதில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
அந்த ஆட்டத்தில் 197 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் இத்தாலிக்கு எதிராக 124 ரன்கள் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 12.4 ஓவர்களில் வெற்றி கண்டிருந்தது.
3-வது முறையாக..
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் அரை இறுதியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. கடந்த 2022, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இரு அணிகளும் அரை இறுதியில் மோதி இருந்தன. இதில் 2022-ல் இங்கிலாந்து அணியும், 2024-ல் இந்திய அணியும் வெற்றி கண்டிருந்தன.
ஆடுகளம் எப்படி?
மும்பை வான்கேடே மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே இருக்கும். மைதானத்தின் எல்லைக்கோடுகள் அளவில் சிறியது என்பதால் சிக்ஸர் மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், தொடக்கத்தில் பந்துகள் நன்கு ‘ஸ்விங்’ ஆகும். இதை வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். பனிப்பொழிவை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.