பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கஃபு
நவி மும்பை: பிரேசில் அணியுடன் இந்திய அணி மோதும் சர்வதேச கால்பந்துப் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அதிக பலன் கிடைக்கும் என்று பிரேசில் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கஃபு தெரிவித்துள்ளார்.
இந்தியா, பிரேசில் கால்பந்து அணிகள் மோதும் முதலாவது சர்வதேச நட்புறவு கால்பந்துப் போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பிரேசில் அணியின் முன்னாள் கேப்டன் கஃபு கூறியதாவது: கால்பந்து தரவரிசையில் பிரேசில் அணி முன்னேறிய நிலையில் உள்ளது. ஆனால் இந்தத் தரவரிசையில் இந்திய அணி பின்தங்கி இருந்தாலும், இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் நட்புறவு கால்பந்துப் போட்டியால் இந்திய அணி வீரர்கள் அதிக பலன் பெறுவர். பிரேசிலுடன் மோதும்போது இந்திய வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.
இந்தியாவில் இளம் வீரர்கள் அதிக அளவில் கால்பந்து விளையாடுவதை இந்திய அரசு ஊக்குவிக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.