மும்பை: எதிர்வரும் 2029 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2031 உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.
2035-ம் ஆண்டு வரையில் ஐசிசி தொடர்களை எந்த நாட்டில் நடத்துவது என்பது குறித்த கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. அதில் வரும் 2031 வரையிலான கிரிக்கெட் தொடர்களை எந்த நாட்டில் நடத்துவது என்று ஐசிசி உறுதி செய்தது. 2032 முதல் நடைபெறும் தொடர்களை நடத்தும் நாடுகள் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
அந்த வகையில் இந்தியாவில் 2029-ம் ஆண்டு ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. அந்த ஆண்டு அக்.9 முதல் 23-ம் தேதி வரையில் இந்த தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
2031 உலகக் கோப்பை
அதே போல 2031 உலகக் கோப்பை தொடர் அக்.9 முதல் நவ.23-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரை இந்தியாவும், வங்கதேசமும் இணைந்து நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற ஐசிசி தொடர்கள் எங்கு?
>> 2028 ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் - அக்.12 முதல் நவ.12 வரை - ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறுகிறது
>> 2029 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - ஜூன் 8 முதல் 12 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.
>> 2030 ஆடவர் டி20 உலகக் கோப்பை - ஜூலை 4 முதல் ஆக.4 வரை இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் நடைபெறுகிறது.
>> 2031 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - ஜூன் 12 முதல் 16 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது.