விளையாட்டு

ஹாக்கியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா: 19-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

செய்திப்பிரிவு

மோகி: சீனாவின் மோகி நகரில் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி 19-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி கார்னர்கள் வாயிலாக 18 கோல்களையும், பெனால்டி ஸ்டிரோக்கில் ஒரு கோலையும் அடித்தது. பூஜா மாலிக் 3 கோல்களையும் (27, 49, 51-வது நிமிடங்கள்), ரோஷினி (9, 60-வது நிமிடங்கள்), சனிகா சந்திரகாந்த் மானே (13, 23-வது நிமிடங்கள்), மது சிதார் (16, 39-வது நிமிடங்கள்), சுப்ரியா (40, 54-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா 2 கோல்களையும் அடித்தனர்.

அதேவேளையில் பூஜா சஹோ (7-வது நிமிடம்), தனுஸ்ரீ (11-வது நிமிடம்), சுக்வீர் கவுர் (13-வது நிமிடம்), கீதா யாதவ் (18-வது நிமிடம்), தனுஜா டாப்போ (25-வது நிமிடம்), பூர்ணிமா யாதவ் (33-வது நிமிடம்), கிருஷ்ணா சர்மா (48-வது நிமிடம்), பினிமா தன் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

SCROLL FOR NEXT