ஹாமில்டன்: இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து வெலிங்டனில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.
இந்த இரு ஆட்டங்களும் மழை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 3-வது ஆட்டம் ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற இருந்தது. மழை காரணமாக 40 ஓவர்களை கொண்ட போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மீண்டும் மழை பெய்தது. 20 ஓவர்கள் கொண்ட போட்டியை நடத்துவதற்கான உள்ளூர் நேரப்படி இரவு 7.50 மணி காலக்கெடுவுக்கு 70 நிமிடங்களுக்கு மேல் அவகாசம் இருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒருநாள் போட்டி வரும் 13-ம் தேதி மவுண்ட்மவுங்கனியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் 15-ம் தேதி நடைபெற உள்ள கடைசி போட்டியிலும் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோர் விளையாடமாட்டார்கள்.
இவர்களுடன் அன்ஷுல் கம்போஜ், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் வெலிங்டனில் உள்ள இந்திய டெஸ்ட் அணியுடன் இணைய உள்ளனர். இதனால் கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலும் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஆகியோரது இடத்தை இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் நிரப்பக்கூடும். கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் செயல்பட உள்ளார்.