வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் இந்திய அணி தகுதி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் புள்ளிகள் சதவீதம் 51.52-ல் இருந்து 50 ஆகக் குறைந்துள்ளது.
நியூஸிலாந்து அணி 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. அந்த அணியின் புள்ளிகள் சதவீதம் 66.67 ஆக உள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 69.23 சதவீதத்துடன் 2-வது இடத்திலும் உள்ளன.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளன. நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இந்த 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் 66.67 ஆக உயரும். இருப்பினும், முதல் 2 இடங்களில் உள்ள அணிகளை முந்துவதற்கு மற்ற அணிகளின் வெற்றி வாய்ப்புகளும் பாதிக்கப்பட வேண்டும். எஞ்சிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு டிரா பெற்றால் இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் 62.96 ஆக இருக்கும். அதேவேளையில் 5 வெற்றி, ஒரு தோல்வி அடைந்தால் அது 61.11 ஆகக் குறையும்.
எனவே, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்தியா எஞ்சியுள்ள 6 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன், அடுத்த 3 மாதங்களில் மற்ற அணிகளும் சில போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.
நடப்பு சாம்பியனான தென் ஆப்பிரிக்கா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.