வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்

 
விளையாட்டு

இந்திய ஆடவர் கபடி அணியும் தங்கம் வென்று அசத்தல் @ ஆசிய விளையாட்டுப் போட்டி

இறுதியில் ஈரானை வீழ்த்தியது

மோகன் கணபதி

நகோயா (ஜப்பான்): ஆசிய விளையாட்டு போட்டியின் ஈரானுக்கு எதிரான கபடி இறுதிப் போட்டியில் 40-34 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது. முன்னதாக, இன்று இந்திய மகளிர் கபடி அணியும் தங்கம் வென்றது கவனிக்கத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியைப் போன்றே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகின்றன.

ஜப்பானின் நகோயா நகரில் இந்தியா - ஈரான் இடையே ஆண்கள் பிரிவுக்கான கபடி விளையாட்டின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி, 40-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்கள் கபடிப் போட்டி 1990 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 10 போட்டிகளில், 2018-ல் வெண்கலப் பதக்கம் வென்றதைத் தவிர மற்ற 9 போட்டிகளிலும் இந்திய ஆடவர் கபடி அணி தங்கம் வென்றுள்ளது. 2018-ல் மட்டும் ஈரான் தங்கப் பதக்கம் வென்றது.

இன்று காலை நடைபெற்ற மகளிர் கபடி இறுதிப் போட்டியில், ஈரானை வீழ்த்தி இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஜப்பானின் டோகாய் நகரில் உள்ள சிட்டிசன் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில், இந்திய அணி 37-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

இன்றைய தினம், மகளிர் கபடி, ஆண்கள் கபடி என இரண்டிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம், 4 தங்கப் பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில், 4 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

SCROLL FOR NEXT