மோசின் நக்வி, ஷோயப் அக்தர்
லாகூர்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்விவை கடுமையாக விமர்சித்திருந்தார் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர். தற்போது அந்த கருத்தை அவர் திரும்பப்பெற்றுள்ளார்.
“மோசின் நக்வியை நான் விமர்சிக்கவில்லை. தகுதியற்றவர் என்ற எனது கருத்து அவர் குறித்து சொன்னது அல்ல. எனது கருத்தை ஊடகங்கள் திரித்து விட்டன. நான் பங்கேற்ற அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோசின் நக்வி குறித்து எதிர்மறை கருத்துகள் சொல்ல வேண்டாம் என தெரிவித்தேன். ஏனெனில், அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அவர் நல்ல மனிதர் என்றுதான் எப்போதும் சொல்வேன். அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவி வருகிறார். ஆனால் அவருக்கு கிடைக்கும் ஆலோசனைகள் சரியானதாக இல்லை என கருதுகிறேன்” என அக்தர் இப்போது தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “தகுதியற்ற ஒருவருக்கு பெரிய பொறுப்பை கொடுப்பதுதான் இந்த உலகின் மிகப்பெரிய குற்றமாகும். அவரால் தேசத்தை நிலைகுலைய செய்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? எதுவும் தெரியாத ஒருவர் (மோசின் நக்வி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக உள்ளார். அப்படி இருக்கும் உங்களால் என்ன செய்ய முடியும்? அணியை எப்படி திறன்பட இயக்க முடியும்.
அவரை சூப்பர்ஸ்டார் (பாபர் அஸம்) எனச் சொல்கிறீர்கள். அவரால் ஓர் ஆட்டத்தை கூட வென்று கொடுக்க முடியவில்லை. இது மாதிரியான நட்சத்திர அந்தஸ்து கொண்டவர்களை தேர்வு செய்வதே அனைத்துக்கும் முதல் தவறாகும்.
இந்தியா உடனான ஆட்டத்தில் ஓரிடத்தில் கூட ஆட்டத்தின் கட்டுப்பாடு பாகிஸ்தான் வசம் இல்லை. ஷாஹீன் அப்ரிடி மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்.
இன்றைய கிரிக்கெட் வடிவத்துக்கு இது தேவைப்படவில்லை. இவர்கள் அழுத்தத்தை கையாளும் வீரர்கள் அல்ல. ஒரு கட்டத்தில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை நம்மால் வீழ்த்த முடியும் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை இருந்தது” என அக்தர் தெரிவித்திருந்தார்.