இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வெற்றிகர கேப்டனும் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் தோனி, தனது கேப்டன்சி தந்திரோபாயத் திறமைக்காக மட்டுமல்லாமல், சக வீரர்களை அரவணைத்து வழிநடத்தும் பண்பிற்காகவும் நீண்ட காலமாக பாராட்டப்பட்டு வருபவர் என்பது ரசிகர்கள் அறிந்ததே.
குறிப்பாக இளம் வீரர்களுக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளித்து, மைதானத்திலும் அதற்கு வெளியிலும் ஆதரவாக இருந்தார் தோனி என்று அவருடன் விளையாடிய வீரர்களின் ஒருமித்த குரலாக இருந்து வருவதும் நாம் அறிந்ததே.
இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக தோனியின் தலைமையில் விளையாடிய பல வீரர்கள், தங்களது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் அவர் வழங்கிய ஊக்கமும் நம்பிக்கையும் குறித்து பலமுறை பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில், இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (RPSG) அணிகளிலும் தோனியுடன் இணைந்து விளையாடிய முன்னாள் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே, தோனியின் அணுகுமுறை குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
தோனி சுற்றுப்பயணங்களின் போது தனது ஹோட்டல் அறையை சக வீரர்களுக்கு எப்போதும் திறந்தே வைத்திருப்பார் என்றும், குறிப்பாக இளம் வீரர்கள் அங்கு வந்து உரையாடவும், மன அழுத்தத்தை மறந்து ஓய்வெடுக்கவும், மொபைல் மற்றும் வீடியோ விளையாட்டுகளை விளையாடவும், ஒன்றாக நேரத்தை செலவிடவும் சுதந்திரமாக இருந்ததாக ரஹானே தெரிவித்தார்.
“தோனி மிகவும் அமைதியானவர், எளிமையானவர். மற்றவர்களைப் போலவே இயல்பாக பழகும் மனிதர். அவரது அறை எப்போதும் அனைவருக்கும் திறந்தே இருக்கும். பலமுறை 10 முதல் 15 வீரர்கள் அல்லது சில சமயங்களில் முழு அணியே அவரது அறையில் இருந்திருக்கிறோம். ஆனால், அவரது அறைக் கதவு மூடியிருந்தால் மட்டும் யாரும் உள்ளே செல்ல மாட்டார்கள். அந்த ஒரு விதியை அனைவரும் மதிப்பார்கள்,” என்று ஓவர் லாப் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரஹானே கூறினார்.
இதற்கிடையில், அஜிங்க்யா ரஹானே சமீபத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்த அவர், இது தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய சரியான தருணம் என்று தெரிவித்தார்.
2011 முதல் 2023 வரை இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய ரஹானே, இந்தியாவின் மிகவும் நம்பகமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்ததுடன், பல மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். தோனி கேப்டன்சியில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்த போது அதிரடி சதம் கண்டார் ரஹானே, அந்த டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி வென்றதை மறக்க முடியாது.
பிறகு 36 ஆல் அவுட்டுக்குப் பிறகு மெல்போர்னில் ரஹானே அடித்த அந்தச் சதமும் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு அவர் கேப்டன்சியில் ஆஸ்திரேலியா அணியை அவர்கள் மண்ணிலேயே 2வது முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரில் முறியடித்ததும் மறக்க முடியாத சாதனைகள் ஆகும்.