விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களைப் புறக்கணித்தால்... - பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை!

ஆர்.முத்துக்குமார்

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்கலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிராக, “கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி உலகக் கோப்பையின் அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அந்தப் போட்டியை தவிர்ப்பது உலக கிரிக்கெட்டுக்கே பாதிப்பு என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

          

பாகிஸ்தான் அரசு ‘தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டும் பங்கேற்கவும்’ என்று பிசிபிக்கு அறிவுறுத்தியுள்ளதாக எழுந்துள்ள செய்திகளை அடுத்து இதுவரை பிசிபி இது தொடர்பாக எந்த அதிகாரபூர்வ தகவலையும் தங்களிடம் பகிரவில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு தேர்ந்தெடுத்த போட்டிகளில் ஆடுங்கள் என்பது உலகக்கோப்பை வடிவத்திற்குப் பொருந்தி வராது என்கிறது ஐசிசி.

இது தொடர்பாக ஐசிசி தன் அறிக்கையில் தெரிவிக்கும் போது, “தேர்ந்தெடுத்த போட்டிகளில் மட்டுமே பங்கேற்பது உலகக் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது. ICC போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, தொடர்ச்சித் தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய அடிப்படைகளில் கட்டமைக்கப்பட்டவை என்றும், தேர்ந்தெடுத்த போட்டிகளை மட்டும் விளையாடும் முடிவு போட்டியின் ஆன்மாவையும் புனிதத்தையும் பாதிக்கும்.

தேசிய கொள்கை தொடர்பான விவகாரங்களில் அரசுகளின் பங்கு மதிக்கப்படுகிறது, இருப்பினும் இந்த முடிவு உலக கிரிக்கெட்டின் நலனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களின் நலனுக்கும் உகந்ததல்ல.

இந்த முடிவு பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட்டின் நீண்டகால எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதன்மூலம் உலக கிரிக்கெட் சூழலே பாதிக்கப்படலாம். அத்தகைய உலக கிரிக்கெட் அமைப்பின் உறுப்பினராகவும் பயனாளராகவும் பாகிஸ்தான் உள்ளது.

2026 ஆண்கள் T20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவது ஐசிசி-யின் முதன்மை இலக்காகும். அதற்கான பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் உண்டு. அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், பிசிபி பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை ஆராய வேண்டும்.” என்று கூறியுள்ளது.

போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் புள்ளிகளை இழக்க நேரிடும். அதோடு நெட் ரன் ரேட் கடுமையாகப் பாதிக்கப்படும். அதாவது எந்த அணி புறக்கணிக்கிறதோ அந்த அணிக்கு முழு 20 ஓவர்களும் நெட் ரன் ரேட்டுக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது பாகிஸ்தானுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் இந்திய அணியைப் பாதிக்காது என்றும் ஐசிசி விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் அணி குரூப் ஏ-வில் இந்தியா, நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தன் அனைத்து லீக் போட்டிகளையும் இலங்கையில் ஆடுகிறது.

வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட மறுத்ததால் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போய் நீக்கப்பட்டதன் பின்னணியில் வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் ஐசிசி பிசிசிஐ-க்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது. இறுதி முடிவு பாகிஸ்தான் அரசு எடுக்கும் முடிவுதான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT