கோண்டா: இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க முடிவு செய்திருந்தார். இதற்காக உத்தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய சீனியர் ரேங்கிங் தொடரில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்க இருந்தார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வினேஷ் போகத் சென்றிருந்தார். அப்போது இந்திய மல்யுத்த சங்க அதிகாரிகள் வினேஷ் போகத்தை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. ஏனெனில் வரும் ஜூன் 26-ம் தேதி வரை எந்தவொரு உள்நாட்டுப் போட்டியிலும் பங்கேற்க வினேஷ் போகத்துக்கு இந்திய மல்யுத்த சங்கம் தடை விதித்துள்ளது.
இதற்கு காரணம் வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்பபெற்றது தொடர்பாக உலக மல்யுத்த கூட்டமைப்புக்கும், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புக்கும் 6 மாதத்துக்கு முன்னரே தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர் மீது ஒழுங்குமுறை மீறல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. இதொடர்பாக இந்திய மல்யுத்த சங்கம் வினேஷ் போகத்திடம் விளக்கம் கேட்டு 15 பக்க கடிதம் அனுப்பி இருந்தது.
இதற்கு வினேஷ் போகத் பதில் அளித்திருந்தார். ஆனால் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு வினேஷ் போகத் பதில் அளிக்கவில்லை எனவும், அவரது பதில் முழுமை பெறாமல் இருப்பதாகவும் இந்திய மல்யுத்த சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே வினேஷ் போகத், கோண்டா போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என இந்திய மல்யுத்த சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 31 வயதான வினேஷ் போகத், இந்திய மல்யுத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் வினேஷ் போகத் கூறியதாவது: நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? நான் சந்நியாசம் வாங்கிக்கொண்டு விளையாட்டை விட்டு போய்விட வேண்டுமா? தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டுமா? அதன் மூலம் எனக்கு எதிரான அவர்களின் சதி வெற்றி பெற வேண்டுமா? நான் மல்யுத்தத்தைக் கைவிட வேண்டும், நான் சோர்வடைய வேண்டும், நான் கைகூப்பி வணங்கிவிட்டு வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இந்திய மல்யுத்த சங்கத்தின் தற்போதைய தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மற்றும் அவரது குழுவினர் என அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதையே விரும்புகிறார்கள். போராடுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. சஞ்சய் சிங்கோ அல்லது எந்தவொரு சம்மேளனமோ எனக்கு இந்த உரிமையைக் கொடுக்கவில்லை.
இந்த நாட்டின் குடிமகளாக எனது உரிமை என்ன என்பது எனக்குத் தெரியும். இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்துக்கு எதிராகப் பேசியதற்காகவே நான் தண்டிக்கப்படுகிறேன். நான் துன்பங்களை அனுபவித்து வருகிறேன். ஆனால், அந்தத் துன்பங்களைத் தாங்கும் சக்தியை கடவுள் எனக்குக் கொடுத்துள்ளார்.
நான் அதை எதிர்கொள்வேன். நான் கடினமாக உழைக்கிறேன், அதற்கான வலிமையும் என்னிடம் உள்ளது. நான் நேர்மை மற்றும் உண்மையின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன். அதற்கான பலனை கடவுள் நிச்சயம் எனக்குத் தருவார். இவ்வாறு அவர் கூறினார்.