அகமதாபாத்: அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும், சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆட்டத்தை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
19-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சாம்பின் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தொடரில் அனைவரது கவனத்தையும் தனது அதிரடி பேட்டிங்கால் ஈர்த்த 15 வயதாகும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இறுதிப் போட்டி பரிசளிப்பு விழாவில் விருதுகளை அள்ளினார்.
இந்த சீசனின் வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர், சூப்பர் சிக்ஸர்ஸ் ஆஃப் தி சீசன், அதிக மதிப்புமிக்க வீரர், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளை சூர்யவன்ஷி வென்றார். அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார் சூர்யவன்ஷி. நடப்பு ஐபிஎல் தொடரில் அவர், 16 ஆட்டங்களில் விளையாடி 237.3 ஸ்டிரைக் ரேட்டுடன் 776 ரன்களை குவித்திருந்தார். இதில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடங்கும். சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்திருந்த கிறிஸ் கெயிலின் (59 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் படைத்திருந்தார்.
இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பல்வேறு விருதுகளை பெற்றுக் கொண்ட வைபவ் சூர்யவன்ஷி கூறியதாவது: இந்த ஐபிஎல் சீசனில் அழுத்தமான போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும், சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் நான் கற்றுக்கொண்டேன். எல்லா போட்டிகளிலும் ஒரே மாதிரியான பாணியில் விளையாட முடியாது. போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, அணியின் தேவைக்கு ஏற்ப விளையாட வேண்டும். பிளே-ஆஃப் போட்டிகளின் போதும் நான் இதை நிறைய கற்றுக்கொண்டேன்.
நான் எப்போதும் எனது இயல்பான ஆட்டத்தை நம்பியே விளையாட முயற்சி செய்கிறேன். ஒரு பந்தை என்னால் சிக்ஸரோ அல்லது பவுண்டரியோ அடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றினால், நான் எதைப் பற்றியும் யோசிக்காமல் முழு பலத்தையும் பிரயோகித்து அப்படியே விளையாட முயற்சி செய்கிறேன். நான் நீண்ட காலத்துக்கு கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், அதற்காக எனது உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக உழைக்கவும் வேண்டும்.
ராஜஸ்தான் அணியில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என்னை முழுமையாக நம்பி ஊக்குவிக்கிறார்கள். மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் என அனைவரும் எனக்கு மிகப்பெரிய அளவில் பக்கபலமாக இருக்கிறார்கள். அங்குள்ள அனைவருமே அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் என்பதாலும், அவர்கள் மிக உயர்தரமான கிரிக்கெட்டை விளையாடுவதாலும், என்னால் அங்கிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. இவ்வாறு வைபவ் சூர்யவன்ஷி கூறினார்.