ஸ்ரீகாந்த் | கவுதம் கம்பீர்
“நிதிஷ் ரெட்டி ஆல்ரவுண்டரா, அக்சர் படேல் ஏன் ஆடவில்லை? ரிஷப் பண்ட் ஸ்லாக் செய்கிறார், வெட்கக்கேடான ஆட்டம், கம்பீர் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை” என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.
கவுஹாத்தி டெஸ்ட்டையும் தோற்று ஒயிட் வாஷ் சீரிஸ் தோல்வியை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கும் நிலையில், ஸ்ரீகாந்த் ஒருவர்தான் கடுமையாக கேள்விகள் எழுப்பி வருகிறார்.
சீக்கி சீக்கா என்ற யூடியூப் சேனலில் ஸ்ரீகாந்த் கூறியது: "ஏன் அக்சர் படேல் ஆடவில்லை. அவர் என்ன இந்த டெஸ்ட்டிற்கு உடல்தகுதி இழந்து விட்டாரா என்ன? அனைத்து மட்டத்திலும் அக்சர் சீராக ஆடுகிறார். எதற்கு அவரை தூக்க வேண்டும்? ஒரு போட்டி விட்டு ஒரு போட்டியில் யாராவது அறிமுக வீரர் ஆட வருகிறார்.
அவர்கள் சோதனை முயற்சி என்று சொல்லலாம். கவுதம் கம்பீர் தான் விரும்பியதைச் சொல்லிவிட்டுப் போகட்டும். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நான் முன்னாள் கேப்டனும், முன்னாள் அணித்தேர்வுத் தலைவருமாவேன். நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்குத் தெரியும்.
நான் ஒன்றும் என் தொப்பி மூலம் பேசவில்லை. நமக்கு ஒரு சீர் தன்மை வேண்டும். இங்கிலாந்தில் பிரில்லியண்ட் ஆக ஆடிய போது பாராட்டத்தான் செய்தேன்.
எனக்குப் புரியவில்லை. 2-ம் நாள் ஆட்டம் முடிந்தவுடன் குல்தீப் யாதவ் சொன்னதைக் கேட்டேன். ‘பிட்ச் ஒரு தார்ச்சாலை அதில் ஒன்றுமே ஆகவில்லை’ என்றார். ஆனால் சைமன் ஹார்மர் மற்றும் கேஷவ் மகராஜ் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் எட்ஜ் செய்து வெளியேறியதையும் நாம் பார்க்கிறோம், மார்க்கோ யான்செனின் பவுன்சரில் அவுட் ஆகிச் சென்றதையும் பார்த்தோம். ஷார்ட் பிட்ச் பந்திற்கு 5 விக்கெட்டுகள்.
சைமன் ஹார்மர் சும்மா தூக்கி ஃபிளைட் செய்கிறார் நம்மாளுங்க ஃபிளாட்டா வீசினாங்க. தார்ச்சாலை பிட்சில் யான்சென் பவுன்சரில் விக்கெட் எடுக்கிறார். எப்படி இதெல்லாம்? ஆனால் நம் ரிஷப் பண்ட் மேலேறி வருகிறார் மட்டையைச் சுழற்றி ஸ்லாக் செய்கிறார்... அவர்கள் அதை அவரது நேச்சுரல் கேம் என்பார்கள். ஆனால் அவரோ கேப்டன்... ஆட்டச் சூழ்நிலை என்னவென்பதை அவர் பார்க்க மாட்டாரா?
அதேபோல் நிதிஷ் ரெட்டியை ஆல்ரவுண்டர் என்று யார் சொன்னார்? அவரது பந்து வீச்சைப் பார்ப்பவர்கள் அவரை ஆல்ரவுண்டர் என்று சொல்வார்களா? மெல்போர்னில் சதமெடுத்தார் அதன் பிறகு அவர் என்ன செய்து விட்டார்? நிதிஷ் ரெட்டி ஆல்ரவுண்டர்னா நான் கிரேட் ஆல்ரவுண்டர்.
சும்மா சொல்றேன்.. அவர் எப்படி ஆல்ரவுண்டர்? அவர் பந்து வீச்சில் ஸ்விங் இருக்கிறதா, வேகம் இருக்கிறதா, பெரிய பிஸ்தா பேட்டரும் இல்லை. அவர் எப்படி ஒருநாள் போட்டி அணியிலும் இருக்கிறார்?அவர் எப்படி அணியில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாகவா? என்ன நடக்கிறது?" என்று ஸ்ரீகாந்த் கடுமையாகச் சாடியுள்ளார்.