அக்சர் படேல்
புதுடெல்லி: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், இம்பாக்ட் பிளேயரை அணியில் 12-வது வீரராக பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே இம்பாக்ட் பிளேயர் விதி இந்திய கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் வளர்ச்சியை பாதிக்க செய்வதாக முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார். பேட்டிங், பவுலிங் என சம அளவிலான ஆல்ரவுண்டர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்ய வேண்டி இருப்பதாகவும், அப்படி இல்லையென்றால் அது கடினம் என்றும் ஹர்திக் பாண்டியா சொல்லி இருந்தார். இந்த விதி ஆட்டத்தை சீர்குலைப்பதாக விராட் கோலி தெரிவித்தார்.
அவர்கள் வரிசையில் அக்சர் படேல் இணைந்துள்ளார். இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான் அவரிடம் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து கேள்விக்கு அவர் பதில் அளித்தார். “நானே ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் எனக்கு இந்த விதியில் விருப்பமில்லை. இதற்கு முன்பு ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்வோம். ஆனால், இப்போது அணி நிர்வாகம் அந்த இடத்தில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலரை பயன்படுத்த முடியும். அதனால் ஆல்ரவுண்டரின் ரோல் தடைபடுகிறது. எதுவாக இருந்தாலும் ஆட்டத்தின் விதியை நாம் பின்பற்ற வேண்டும். எனக்கு அதில் விருப்பமில்லை என்பது எனது சொந்த கருத்து” என்றார்.
வரும் ஏப்.1-ம் தேதி அன்று லக்னோ அணிக்கு எதிராக டெல்லி அணி, இந்த சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் லக்னோ நகரில் நடைபெற உள்ளது. டெல்லி அணியில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பந்து வீச்சாளர் அகிப் நபி, பதும் நிசாங்கா, டேவிட் மில்லர், பென் டக்கெட், லுங்கி இங்கிடி உள்ளிட்ட வீரர்களை இந்த சீசனை முன்னிட்டு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. நிதிஷ் ராணா டிரேடிங் முறையில் பெறப்பட்டுள்ளார்.