விளையாட்டு

“என்னால் தூங்க முடியவில்லை” - சஞ்சு சாம்சன் நீக்கம் குறித்து கம்பீர் உருக்கம்

ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யாமல் நீக்கியதை நினைத்து தன் பயிற்சியாளர் வாழ்க்கையில் முதல் முறையாக தூக்கம் இழந்ததாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஜியோ ஹாட்ஸ்டாருக்காக அவர் கூறும்போது, “இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் நிலையில், சஞ்சு சாம்சனை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கிய முடிவு எனது பயிற்சிக் காலத்தில் டி20 வடிவத்தில் எடுத்த மிகக் கடினமான முடிவாக இருந்தது. அந்த முடிவை எடுத்த இரவு என்னால் தூங்கவே முடியவில்லை.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றபோது தொடர் நாயகன் விருது பெற்றிருந்த சஞ்சுவை, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளில் சொதப்பிய பிறகு, மூன்று அல்லது நான்கு போட்டிகளிலேயே அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. அந்த நேரத்தில் ஐபிஎல் தொடரிலும் வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஃபார்மில் இருந்தார்.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை நாம் வெல்ல வேண்டியிருந்தது. இந்திய அணிக்காக விளையாடும்போதும், இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் போதும், முடிந்த ஒவ்வொரு தொடரையும் வெல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்.

எனவே, சஞ்சுவுடன் மிகவும் நேர்மையான உரையாடலை நடத்தினேன். தொடக்கத்தில் ரன்கள் குவிக்கவும், அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தவும் ஒருவர் தேவைப்பட்டார். அந்த நேரத்தில் வைபவ் சிறப்பான ஃபார்மில் இருந்ததால் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று சஞ்சுவிடம் விளக்கினேன். அவரும் அதை புரிந்துகொண்டு, நல்ல மனநிலையுடன் ஏற்றுக்கொண்டார்.

வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி வந்தாலும், நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்கள் இருக்கும்போது, சில நேரங்களில் இளம் வீரர்கள் தங்களது வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை அவரிடம் புரியவைத்தேன். சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகளோ அல்லது வெளியில் இருந்து வரும் விமர்சனங்களோ இந்திய அணியின் ஆடும் லெவன் அணியைத் தீர்மானிக்காது.

பயிற்சியாளரும் கேப்டனும் இணைந்து, அந்த அணியில் இருந்து யார் போட்டியை வென்று தர முடியும், சிறந்த ஆடும் லெவன் எது, நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருபவர்கள் யார் என்பதன் அடிப்படையில்தான் அணியைத் தேர்வு செய்கிறோம். இன்று வைபவ் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டால், அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவரை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்பதால், அதுவும் எனக்கும் அந்த வீரருக்கும் இடையே கடினமான உரையாடலாகவே இருக்கும்” என்று கம்பீர் கூறினார்.

SCROLL FOR NEXT