புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் 156 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே 17.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 52 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் கார்த்திக் சர்மா 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாசினர். சிஎஸ்கே அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. 10 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் சஞ்சு சாம்சன் கூறியதாவது: ரசிகர்கள் என்னை ‘சேட்டா’ என்று அழைக்கிறார்கள், ஆனால் எனக்கு சஞ்சு என்று அழைக்கப்படுவதே அதிகம் பிடிக்கும். நமக்கு எது சரியாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வதுடன் பேட்டிங்கில் அடிப்படை விஷயங்களில் உறுதியாக இருக்க வேண்டும். டி 20 கிரிக்கெட்டில் பேட்டிங்கின் போது கைகளின் வேகத்தை நம்ப வேண்டும். கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்.
என்னுடைய ஆரம்பக்கட்ட நகர்வுகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன், அது இப்போது சிறப்பாகக் கை கொடுக்கிறது. நாங்கள் எவ்வளவு ரன்களைத் துரத்திக் கொண்டிருக்கிறோம், ஆடுகளம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்தபோது, பவர்பிளவில் விக்கெட் இழப்பின்றி அல்லது ஒரு விக்கெட் இழப்பிற்கு 30-35 ரன்கள் எடுத்தால் கூட போதும் என்று எனக்குத் தோன்றியது. ஏனென்றால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும், மிடில் ஓவர்களிலும் என்னால் என்ன செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும். எனது திட்டத்தில் எனக்கு தெளிவான புரிதல் உள்ளது.
எனவே, பவர்பிளேயில் நான் சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டாலும், என்னிடம் உள்ள ஷாட்களை வைத்து மிடில் ஓவர்களில் அதை ஈடுகட்டிவிட முடியும் என்று நினைத்தேன். அதுதான் எனது திட்டமாக இருந்தது. சில நேரங்களில் அது மிகச் சிறப்பாகக் கைகொடுக்கும். அந்த வகையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அது பலன் அளித்தது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
சதம் அடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அதை அடைவதற்கு நான் சுயநலமாக இருந்திருக்க வேண்டும். போட்டியை வெல்வதே முக்கியம் என்று நினைத்தேன். அதேசமயம் மறுமுனையில் மற்றொரு வீரரும் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அதனால் அவரிடம் சென்று “ஒரு சிங்கிள் எடுப்பா, நான் சதம் அடிக்கணும்” என்று சொல்ல எனக்குத் தோன்றவில்லை. அவுட் ஆகாமல் களத்தில் இருந்து போட்டியை முடித்து வைப்பது அதிக திருப்தியைத் தருகிறது. அதை நான் மிகவும் ரசித்தேன். இன்னும் சில போட்டிகள் மீதமுள்ளன, மீண்டும் ஒருமுறை சதம் அடிக்கிறேனா என்று பார்ப்போம். இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.