ஹுப்ளி: ரஞ்சி கிரிக்கெட் கோப்பையை வென்று ஜம்மு-காஷ்மீர் அணி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்றது. கடந்த 24ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஷுபம் பண்டிர் 121, யாவர் ஹசன் 88, பராஸ் டோக்ரா 70, அப்துல் சமத் 61, கன்ஹையா வாதவன் 70, சாஹில் லோத்ரா 72 ரன்கள் குவித்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் ஜம்மு-காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய கர்நாடக அணி 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் ஆகிப் நபி 5 விக்கெட்களைச் சாய்த்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் 291 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்ஸை தொடங்கியது.
2-வது இன்னிங்ஸிலும் ஜம்மு-காஷ்மீர் அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது நாள் ஆட்ட முடிவில் தொடக்க வீரர் இக்பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதனால், ஜம்மு-காஷ்மீர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. 477 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தை ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் தொடர்ந்தனர். இக்பால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மற்றொரு முனையில் சாஹில் லோத்ராவும் சதமடித்தார்.
4 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இக்பால் 160 ரன்களுடனும், லோத்ரா 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மொத்தமாக 633 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்கோரை கர்நாடக அணியால் எட்டுவது மிகவும் கடினம். எனவே, போட்டியை முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி கிரிக்கெட் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தது. ஷுபம் பண்டிர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும் தொடர்நாயகனாக ஆகிப் நபி தேர்வானார். அவர் இந்தத் தொடரில் 55 விக்கெட்களைச் சாய்த்திருந்தார்.
‘ஆகிப் நபி பெயர் பரிசீலிக்கப்படும்’: ரஞ்சி கோப்பை போட்டியில் அபாரமாக விளையாடி ஆகிப் நபியின் பெயரை தேர்வுக் குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பர் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் தேவஜித் சைக்கியா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நேற்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் தேவஜித் சைக்கியா கூறும்போது, “கடந்த 2 அல்லது 3 ஆண்டு காலமாக ஜம்மு-காஷ்மீர் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
இறுதிப் போட்டியில் ஆகிப் நபி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார். கால் இறுதி, அரை இறுதிப் போட்டிகளிலும் அவர் அபாரமாக செயல்பட்டார். இந்திய அணித் தேர்வுக் குழுவினர் இங்கும் வந்துள்ளனர். இந்திய அணித் தேர்வின் போது அவரது (ஆகிப் நபி) செயல்பாடு குறித்து நிச்சயம் அவர்கள் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்வர்" என்றார்.
ரூ.2 கோடி பரிசு: முதல்வர் அறிவிப்பு - ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றுள்ள ஜம்மு- காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஜம்மு- காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு- காஷ்மீர் அணி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் அணிக்கு முதல்வர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஹூப்ளி மைதானத்துக்கு நேரடியாக வந்த முதல்வர் உமர், போட்டியின்போது அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது: வரலாற்றுச் சாதனை வெற்றியால் ஜம்மு- காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் உத்வேகத்தாலும், பெருமையாலும் நிரம்பியுள்ளது. அணியினருக்கு பரிசாக ரூ.2 கோடி ரொக்கம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.