சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது. ஆனால் இதே ஆடுகளத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரரான சாய் சுதர்சன் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
வெற்றிக்கு பின்னர் சாய் சுதர்சன் கூறியதாவது: சொந்த மண்ணில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இன்னிங்ஸிலிருந்து கிடைத்த தன்னம்பிக்கையைப் பயன்படுத்தி, எவ்வளவு சிறப்பாக விளையாட முடியுமோ அவ்வளவு சிறப்பாக விளையாட நினைத்தேன். நான் ரன்கள் எடுக்கிறேனா இல்லையா என்பதைப் பற்றிப் பார்ப்பது இல்லை.
ஆட்டம் எப்படிச் செல்கிறது என்பதை மட்டுமே கவனிக்கிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று எளிதாக இருந்ததாகவே உணர்ந்தேன். இருப்பினும் முதல் ஆறு ஓவர்கள் விளையாடுவதற்குச் சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் ஆடிய அசாதாரணமான அதிரடி ஆட்டமே எங்களை வலுவான நிலையில் வைத்திருக்க உதவியது.
பந்து பேட்டிற்கு வரும்போது, அதன் போக்கிலேயே மிகவும் நிதானமாக விளையாட நினைக்கிறேன். அதுதான் எனது இலக்காக இருக்கிறது. அதற்காகவே கடினமாக உழைக்கிறேன். ஆரம்பத்தில் சில இன்னிங்ஸ்களில் என்னால் சரியான ரிதத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் இப்போது அந்த ரிதம் கிடைத்தவுடன், அனைத்தும் இயல்பாக அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.