ஆம்ஸ்டல்வீன்: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் போட்டியில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதியது.
இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணிக்கு 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும், இங்கிலாந்து அணிக்கு 12 பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன. ஆனால் இரு அணிகளின் வீராங்கனைகளும் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சீனாவுடன் டிரா செய்திருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. இதே பிரிவில் சீனா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 2-வது சுற்றில் கால்பதித்தது.