உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் ‘டி’ பிரிவில் நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால், அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வரும் 19-ஆம் தேதி பரம வைரியான பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தை இந்தியா வெற்றியுடன் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்தியா ஆக்ரோஷமாக விளையாடியது. 3-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், அபிஷேக்கிற்கு பந்தை வழங்க, அவர் கோல் வட்டத்துக்குள் நுழைந்தார். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் அதைத் தடுத்தனர். 7-வது நிமிடத்தில் ஜர்மன்பிரீத் சிங் பந்தை கைப்பற்றி தில்பிரீத்திடம் வழங்கினார். தில்பிரீத்தின் கிராஸ் ஷிலானந்த் லக்ராவை சென்றடையவில்லை. தொடர்ந்து கிடைத்த வாய்ப்பில் ஜர்மன்பிரீத்தின் ஷாட் கோல் கம்பத்தை விட்டு விலகிச் சென்றது.
10-வது நிமிடத்தில் சுமித் ஃபவுல் என்று தீர்ப்பளிக்கப்பட்டு பச்சை அட்டை பெற்றதால் இந்தியா சிறிது நேரம் 10 வீரர்களுடன் விளையாடியது. இதைப் பயன்படுத்தி இங்கிலாந்து நெருக்கடி அளித்து பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றது. ஆனால், சாம் ஹூப்பரின் முயற்சியை மண்ப்ரீத் சிங் அபாரமாகத் தடுத்தார்.
முதல் காலிறுதியின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. ஹூப்பர் கோல் வட்டத்துக்குள் பந்தை தூக்கி அனுப்ப, ஸ்டூவர்ட் ரஷ்மியர் அதை சிறப்பாகக் கட்டுப்படுத்தினார். பின்னர் நிக்கோலஸ் பண்டருக் இந்திய வீரர்களின் தடுப்பைத் தாண்டி பந்தை கோல் கீப்பர் மோஹித்தைக் கடந்து வலைக்குள் செலுத்தினார்.
ஆனால், இரண்டாவது காலிறுதியின் தொடக்கத்திலேயே இந்தியா பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தனது புகழ்பெற்ற சக்திவாய்ந்த டிராக்-ஃபிளிக் மூலம் பந்தை மேல் இடது மூலையில் செலுத்தி ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
தொடர்ந்து இந்தியா அழுத்தம் கொடுத்தது. 19-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னரில் ஹர்மன்ப்ரீத்தின் ஃபிளிக்கை இங்கிலாந்து கோல் கீப்பர் ஆலிவர் பெய்ன் தடுத்தார். ஆனால், 25-வது நிமிடத்தில் இந்தியாவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஹார்திக் சிங்கின் இடதுபுற பாஸை அபிஷேக் பெற்றுக் கொண்டு அபாரமாக கிராஸ் செய்தார். அதை கோல் முனையில் இருந்த தில்பிரீத் சிங் துல்லியமாக கோலாக்க, இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவில் இந்தியா ஒரு கோல் முன்னிலையில் இருந்தது.
ஆனால், மூன்றாவது காலிறுதி முழுவதும் இங்கிலாந்தின் ஆதிக்கமாக அமைந்தது. இந்திய வீரர்கள் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தடுமாறிய நிலையில், இங்கிலாந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி 39-வது நிமிடத்தில் சமன் செய்தது. தனிநபர் முயற்சியில் முன்னேறிய ஸ்டூவர்ட் ரஷ்மியர் அமைதியாக பந்தை வலைக்குள் செலுத்தினார்.
அதன்பின் 43-வது நிமிடத்தில் ரஷ்மியர் உருவாக்கிய தாக்குதல் முயற்சியில் ஹென்றி கிராஃப்ட் கோல் அருகே பந்தைப் பெற்று தாழ்வாக அடித்து கோலாக்கினார். இதனால் இங்கிலாந்து 3-2 என முன்னிலை பெற்றது.
கடைசி காலிறுதியில் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றது. ஹர்மன்ப்ரீத்தின் முயற்சிக்குப் பிறகு கிடைத்த பெனால்டி கார்னரை இந்தியா கோலாக மாற்றத் தவறியது. ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்கள் இருந்தபோது மந்தீப் சிங்கிற்கு இங்கிலாந்து வீரர் இடையூறு செய்ததாக இந்தியா முன்வைத்த வீடியோ ரெஃபரல் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பெனால்டி கார்னர்கள் கிடைத்தபோதிலும், அவற்றை கோல்களாக மாற்ற முடியவில்லை. 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை நிக்கோலஸ் பண்டருக் கோலாக்கி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்த இந்தியா, தற்போது 3 புள்ளிகளுடன் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஒரு புள்ளியுடன் உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம். அந்த ஆட்டம் டி பிரிவில் இந்தியாவின் கடைசி லீக் போட்டியாக ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.