விளையாட்டு

ஹை-டெக் உலகக் கோப்பை | FIFA WC 2026

செய்திப்பிரிவு

2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு தொடராக இது அமையவுள்ளது.

போட்டிகளில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ 'அடிடாஸ் ட்ரியோண்டா' பந்திற்குள் அதிநவீன சென்சார் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு நொடிக்கும் 500 முறை தரவுகளை பதிவு செய்கிறது. பந்தின் மீதான ஒவ்வொரு தொடுதல், சுழற்சி மற்றும் வீரர்களின் தொடர்புகளையும் துல்லியமாகக் கண்காணிக்கும்.

இதன் மூலம் எந்த வீரர் பந்தை கடைசியாகத் தொட்டார் என்பதை நடுவர்கள் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். மேலும் தொடரில் பங்கேற்கும் 1,248 வீரர்களும் முழுமையாக ஸ்கேன் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஸ்கேன்கள் மூலம் வீரர்களின் 3 டி டிஜிட்டல் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக போட்டியில் 'ஆஃப்சைடு' முடிவுகளை எடுக்கும்போது, மைதானத்தில் உள்ள திரையில் இந்த 3டி அவதார் ரீப்ளே செய்யப்படும். இதனால் நடுவர்களின் முடிவுகளில் எவ்வித குழப்பமும், விவாதங்களும் இன்றி துல்லியமான தீர்ப்பு வழங்கப்படும். இதுதவிர லெனோவா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ’ஃபுட்பால் ஏஐ புரோ‘ என்ற மென்பொருள் கருவி அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, முன்பு பெரிய கிளப் அணிகள் மட்டுமே கோடிக்கணக்கில் செலவு செய்து பெற்று வந்த முழுமையான போட்டி பகுப்பாய்வு, வீரர்களின் தரவுகள் மற்றும் ஆட்ட உத்திகள் போன்ற தகவல்கள், இப்போது உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் சமமாகக் கிடைக்கும். போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் திரைகளில் பார்க்கும் ரசிகர்களுக்காக ஃரெப்ரீ வியூ’ என்ற ஏஐ கேமரா அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது ரசிகர்களை நேரடியாக மைதானத்தின் நடுவே, வீரர்களுக்கு மிக அருகில் நின்று போட்டியைப் பார்ப்பது போன்ற பிரத்யேக நேரடி உணர்வைத் தரும். ஒட்டுமொத்தத்தில் 2026-ம் உலகக் கோப்பை தொடரானது வெறும் கால்பந்து போட்டியாக மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே தீர்ப்புகளை வழங்கவும், ரீப்ளேக்களை உருவாக்கவும், பில்லியன் கணக்கான ரசிகர்களின் அனுபவத்தை மாற்றியமைக்கவும் போகும் ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாக அமையவுள்ளது.

SCROLL FOR NEXT