ஹென்றி நிக்கோல்ஸ்
வெலிங்டன்: வெலிங்டனில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து பேட்ஸ்மேனான ஹென்றி நிக்கோல்ஸ் (113*) சதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் ஹென்றி நிக்கோல்ஸ் கூறியதாவது:
ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சு முறை மிகவும் வித்தியாசமானது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக ஏற்கெனவே சில முறை விளையாடியுள்ளேன். இதனால் அவரைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். இருப்பினும், அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்.
வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் அவர், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்த விதம் வியப்பளித்தது. 2-வது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலும் இதேபோன்ற பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது மீண்டும் கடினமான சவாலாக இருக்கும். முதல் பகுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தில் எங்களின் நிலைமை இதைத் தெளிவாகக் காட்டியது.
கிளென் பிலிப்ஸுடனான பார்ட்னர்ஷிப் எனது ஆட்டத்தை எளிதாக்கியது. அவர், தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டதால் எனக்கு நம்பிக்கை கிடைத்தது. பிலிப்ஸ் சிறந்த வீரர். அவரது அதிரடி ஆட்டமும், ரன்களுக்கு இடையே வேகமாக ஓடுவதும் சிறப்பானது. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இருவருமே தொடர்ந்து ரன்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.
இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துகளை வீசினால், அதை ஏற்றுக்கொண்டு பொறுமையாக விளையாட வேண்டும். நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்தி, கிடைக்கும் வாய்ப்புகளை ரன்களாக மாற்ற வேண்டும் என நாங்கள் முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு விளையாடினோம். 2-வது நாள் ஆட்டத்தில் முடிந்தவரை அதிக ரன்களைச் சேர்க்க விரும்புகிறோம்.
கிளென் பிலிப்ஸும் நானும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் கடினமாக உழைத்து ரன்கள் சேர்ப்பதே எங்களின் இலக்கு. இவ்வாறு ஹென்றி நிக்கோல்ஸ் கூறினார்.