சர்பிராஸ் கான் மற்றும் அஸ்வின்
விஜய் ஹஜாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கோவா அணிக்கு எதிராக அதிரடி சதம் கண்ட மும்பை வீரர் சர்பிராஸ் கானின் அபார பேட்டிங் ஃபார்மை பாராட்டி, இந்திய அணியின் கதவை ‘அவன் வெறுமனே தட்டல.. இடிச்சி உடைச்சிட்டிருக்கான்’ என்று தன் யூடியூப் வீடியோவில் அஸ்வின் விதந்து கூறியுள்ளார்.
மேலும், ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லெவனில் அல்லது ‘இம்பாக்ட் பிளேயர்’ ஆக அவரை சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் தன் X தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
புதன்கிழமை ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிரோபி போட்டியில், கோவாவுக்கு எதிராக மும்பை 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய சர்பிராஸ் கான், வெறும் 75 பந்துகளில் 157 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகள் மற்றும் 14 சிக்ஸர்களைப் பறக்க விட்டார் சர்பிராஸ் கான்.
சர்பராஸ் கானின் தொடர் அபார பேட்டிங் ஃபார்மை அடுத்து அஸ்வின் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் இப்போது தொடர்ச்சியாக விஜய் ஹஜாரே ஒருநாள் தொடர் இரண்டிலும் அதிரடி ஃபார்மை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கானைப் பாராட்டி, “சையத் முஷ்டாக் அலி டிராபியில் 100*(47), 52(40), 64(25), 73(22). அந்த ஃபார்ம் ஹசாரே டிரோபியிலும் தொடர்கிறது – 55(49), இன்று 157(75) இதில் 14 சிக்சர்கள்.
மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப்பில் அவர் அடிக்கும் விதம் அபாரமானது. ‘அவன் கதவைத் தட்டல, இடிச்சி உடைச்சிட்டு இருக்கான்.’ CSK அவரின் இந்த ‘பர்ப்பிள் பேட்ச்சை’ பயன்படுத்தி அவரை அணியிலோ அல்லது இம்பாக்ட் பிளேயராக ஆகச் சேர்க்கலாமே? இந்த சீசனில் மஞ்சள் படைக்கு பேட்டிங்கில் இனிமையான தலைவலி!” என்று பதிவிட்டுள்ளார் அஸ்வின்.
2025-ல் நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி டிரோபியில், சர்பிராஸ் கான் ஏழு போட்டிகளில் 329 ரன்கள் குவித்து, 203.08 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 65.80 சராசரியுடன் அசத்தியிருந்தார். இருப்பினும் ஐபிஎல் 2026க்கான ஏலத்தில் முதல் சுற்றில் இவரை யாரும் கண்டு கொள்ளவில்லை,கடைசிச் சுற்றிலும் எந்த அணியும் கண்டு கொள்ளாத அதிர்ச்சிகளுக்கு இடையில் சிஎஸ்கே சர்பராஸ் கானை 74 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஏலம் எடுத்து என்ன பயன், வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதே உண்மை.
ஏனெனில் சிஎஸ்கெ நிர்வாகம் - தோனி தலைமை வரலாற்றில் தமிழக வீரர் பாபா அபராஜித்திற்கு எந்த ஆண்டும் வாய்ப்புக் கொடுக்காமல் புறக்கணித்ததை நாம் பார்த்திருக்கிறோம். சர்பராஸ் கானையும் அம்மாதிரி செய்யாமல் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்கிறார் அஸ்வின்.
இந்த முறை சிஎஸ்கே அனுபவ முன் முடிவிலிருந்து விலகி ஃபார்ம், மற்றும் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்த வகையில் சஞ்சு சாம்சனை எடுத்துள்ளது, ஏற்கெனவே ருதுராஜ் இருக்கிறார், டெவால்ட் பிரேவிஸ் இருக்கிறார், இப்போது ஆயுஷ் மாத்ரேவுடன் சர்பராஸ் கானும் இணைந்துள்ளார்.
ஆகவே ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.