ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 24 வயதான துளசிமதி முருகேசன். பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் ராஜஸ்தானைச் சேர்ந்த மானஷி ஜோஷியுடன் இணைந்து விளையாடிய துளசிமதி, சீன ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதுதவிர, மகளிர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
காஞ்சிபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முருகேசன் - விஜி தம்பதியின் மகள் துளசிமதி (24). இவருக்கு கிருத்திகா என்ற சகோதரியும் உள்ளார். பிறக்கும்போதே ஒரு கையில் பாதிப்புடன் இருந்தபோதிலும், சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார் துளசிமதி.
மகளின் ஆர்வத்தையும் திறமையையும் அடையாளம் கண்ட அவரது தந்தை முருகேசன், இரு மகள்களையும் அருகிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் மகள்களின் விளையாட்டுக் கனவு நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஆனால், துளசிமதி விளையாட்டில் ஈடுபடத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தனது விளையாட்டுப் பயணம் குறித்து துளசிமதி கூறியதாவது: சிறு வயதிலிருந்தே எனது தந்தை எனக்கு விளையாட்டில் ஊக்கம் அளித்தார். எனது சகோதரி கிருத்திகாவுடன் சேர்த்து எனக்கும் பயிற்சி அளித்தார். ஆரம்பத்தில், ஒரு கை ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும்போது மற்றொரு கையையும் உடைத்துக்கொள்ளப் போகிறாயா என்பது போன்ற கேலிப் பேச்சுகளை எதிர்கொண்டோம்.
ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எனது தந்தை தொடர்ந்து பயிற்சி அளித்தார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்றோம். சில போட்டிகளில் வெற்றி பெற்றோம்; சில நேரங்களில் தோல்வியடைந்தும் திரும்பியுள்ளோம். ஆரம்ப காலத்தில் விளையாட்டு மட்டை உள்ளிட்ட உபகரணங்களை வாங்குவதற்குக்கூட சிரமப்பட்டோம். இத்தனை சிரமங்களைக் கடந்துதான் இந்த நிலையை அடைந்துள்ளோம். தற்போது நாமக்கல்லில் கால்நடை மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு படித்து வருகிறேன். எனக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே எனது தந்தை நாமக்கல்லுக்கு வந்து தங்கியுள்ளார்.
விளையாட்டில் இதுதான் எல்லை என்று எதுவும் இல்லை. தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விளையாட்டில் சாதிக்கத் தேவையான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே, 2024-ல் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று துளசிமதி சாதனை படைத்துள்ளார். அவரது விளையாட்டுத் திறமையைப் பாராட்டி மத்திய அரசின் அர்ஜுனா விருதும், தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டுள்ளன. பிறவி பாதிப்பு, பொருளாதார நெருக்கடி, சமூகத்தின் கேலிப் பேச்சுகள் எனப் பல தடைகளைத் தாண்டி சர்வதேச அரங்கில் பதக்கங்களை வென்றுள்ள துளசிமதியின் பயணம், விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது.