சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் விரைவாக ரன் எடுத்தார். ஆனால் அதிக ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார். இதுதான் ஐபிஎல் 2026-ல் சூரியகுமார் யாதவ்வின் கதையாக உள்ளது. சூரியகுமார் மனது ஒன்று நினைக்கிறது. கை ஒன்று செய்கிறது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஸ்ட்ரைக் ரேட் கூட 144 என்று பரவாயில்லை ரகம். ஆனால் ரன்கள் அதிகம் அடிக்க முடியவில்லை. இதுதான் அவர் பிரச்சினை. 9 இன்னிங்ஸ்களில் 183 ரன்களையே இந்தத் தொடரில் அடித்துள்ளார். வேகப்பந்து வீச்சை இதுவரை அடித்து ஆடியது போல் இப்போது ஆட முடியவில்லை.
கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் படி, வேகப்பந்து வீச்சிற்கு எதிராக 10.71 தான் சராசரி வைத்துள்ளார். 2023 ஐபிஎல் தொடரில் முதன் முதலாக சூரிய குமார் 600 ரன்களைக் கடந்தார். 2025-ல் இவர்தான் மதிப்பு மிக்க வீரர் என்று அறுதியிடப்பட்டார். வேகப்பந்து வீச்சிற்கு எதிராக 172 என்று இருந்த சூரியாவின் ஸ்ட்ரைக் ரேட் 133 என்று வீழ்ச்சி கண்டுள்ளது. இவருக்கு எதிராக எதிரணியினர் திட்டமிடுதலை மிகச்சரியாகச் செய்கின்றனர்.
ஷார்ட் மற்றும் குட் லெந்த்திற்கு சற்றே குறைந்த அளவில் பிட்ச் ஆகும் பந்துகள் இவருக்கு கடும் தொல்லையாக மாறியுள்ளது. வயதாக வயதாக பந்துக்கான ரியாக்ஷன் குறைந்து போய் பந்தை நோக்கி முன் கூட்டியே அவசரமாகப் போகும் பழக்கம் ஏற்படும் என்பதுதான் நடக்கும்.
அதனால்தான் அவர் வழக்கமாக ஆடும் ஷாட்கள் கூட கேட்ச் ஆகிறது. ஃபுல் ஷாட், பைன் லெக் திசையில் அடிக்கும் ரேம்ப் ஷாட் போன்ற அவரது ஃபேவரைட் ஷாட்களும் கேட்ச் ஆகின்றன. அவர் தன் ஆட்டத்தை மாற்ற வேண்டும், ஷாட்களை மாற்ற வேண்டும் என்ற காலக்கட்டத்தில் இருக்கிறார் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் மும்பை இந்தியன்ஸ் பவுலரும் முன்னாள் நியூஸிலாந்து வீரருமான மிட்செல் மெக்லினாகன் என்ன கூறுகிறார் என்றால் அவர் இன்னும் கொஞ்சம் எடை குறைவான பேட்டை வைத்து ஆடினால் டைமிங் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்.
தொடர்ந்து சீராக ஆட முடியாமல் ஒரு போட்டியில் ஆடினால் இன்னொரு போட்டியில் ரன்கள் எடுக்க முடியாமல் போகும். இதனை கிரிக்கெட்டில் ‘law of averages' என்று அழைப்பார்கள், சூரியகுமாருக்கு இது அப்படிப்பட்ட ஒன்றா அல்லது வயதாகி விட்டதா? என்பதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும் அல்லது பேட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
கோலிக்கு நீண்ட காலம் இந்தப் பிரச்சினை இருந்தது. அதை அவர் பயிற்சியின் மூலமும் பல்வேறு உத்திகள் மூலமும் களைந்து இன்று வெல்ல முடியா ஒரு வீரராக மீண்டெழுந்ததை சூரியகுமார் யாதவும் பின்பற்றினால் மீண்டும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அவர் ஆட முடியும்.