சென்னை: கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
இந்த பதக்கங்கள் அனைத்தும் பளுதூக்குதல் (4), பாரா பவர்லிஃப்டிங்கில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 8-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மகளிர் 53 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் ஞானேஸ்வரி யாதவ் பங்கேற்றார். 23 வயதான அவர், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்.
மொத்தமாக 199 கிலோவைத் தூக்கி வெள்ளி வென்றுள்ளார் ஞானேஸ்வரி. ஸ்னாட்ச் முறையில் 88 கிலோவையும், க்ளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவையும் தூக்கி, தனது பிரிவில் இரண்டாம் இடத்தை அவர் பிடித்தார்.
நைஜீரியாவின் ஓனோமே ஓமோலோலா டிடிஹ் 206 கிலோவை தூக்கி இந்த பிரிவில் முதலிடம் பிடித்தார். இது காமென்வெல்த் விளையாட்டில் சாதனையாக அமைந்துள்ளது. கனடாவின் ரெபேக்கா மூன்றாம் இடம் பிடித்தார்.