விளையாட்டு

சிஎஸ்கேவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி: சாய் சுதர்சன் அதிரடி

வெற்றி மயிலோன்

சென்னை: இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்​கம் எம்​ஏ சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி - குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதின. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக ஆடி சென்னையின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த கில் நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த பட்லர் பொறுப்பாக ஆடினார். 16வது ஓவரில் 46 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன் ஹுசைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியபடியே ஆடியது. சென்னை அணி 21 ரன்கள் எடுத்திருந்த போது, 11 ரன்களுடன் களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் உர்வில் படேலும் 4 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர் சிராஜ் வீசிய ஓவரில் சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து விக்கெட் விழுந்ததால் சென்னை அணி ரன்கள் எடுக்க தடுமாறியது. ஒருபக்கம் கெய்க்வாட் நிதானமாக விளையாடினாலும், மறுபக்கம் பிரெவிஸ் 2 ரன்களிலும், ஷிவம் துபே 22 ரன்களிலும், கார்த்திக் ஷர்மா 15 ரன்களிலும், ஓவர்டன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணி ரன்கள் எடுக்க தடுமாறினாலும், கடைசி 2 ஓவர்களில் சிறப்பாக ஆடினர். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கெய்க்வாட் 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், அர்ஷாத் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT