இந்​தி​யா​வின் ஜண்டு குமார்

 
விளையாட்டு

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு: பாரா வலுதூக்குதலில் வெண்கலம் வென்றார் ஜண்டு குமார்

செய்திப்பிரிவு

கிளாஸ்கோ: 23-வது காமன்​வெல்த் விளை​யாட்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவருக்​கான பாரா வலுதூக்​குதல் ஹெவிவெ​யிட் பிரி​வில் இந்​தி​யா​வின் ஜண்டு குமார் 130.9 புள்​ளி​களை குவித்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

நடப்பு தொடரில் இந்​தி​யா​வின் முதல் பதக்​க​மாக இது அமைந்​தது. ஜண்டு குமார் 181 மற்​றும் 190 கிலோ எடையை வெற்​றிகர​மாக தூக்​கி​னார். இறுதி முயற்​சி​யில் 196 கிலோ எடையை அவரால் தூக்க முடி​யாமல் போனது. மற்​றொரு இந்​திய வீர​ரான சுதிர் 114.1 புள்​ளி​களு​டன் 6-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். நைஜீரி​யா​வின் இத்​ரிஸ் ரிலு​வான் 132.8 புள்​ளி​களு​டன் தங்க பதக்​க​மும், மேத்யூ ஹார்​டிங் 131 புள்​ளி​களு​டன் வெள்​ளிப் பதக்​க​மும் வென்றனர்.

ஜண்டு குமார் கூறும்​போது, “என் மகிழ்ச்​சியை வார்த்​தைகளால் வெளிப்​படுத்த முடி​யாது. நாட்​டுக்கு இது முதல் பதக்​கம் என்பதால் மிக​வும் முக்​கிய​மானது. பதக்க மேட்​டை​யில் நாட்​டின் தேசி​யக் கொடியைப் பார்க்​கும்​போது மகிழ்ச்​சி​யாக இருந்​தது’ என்​றார்.

யார் இந்த ஜண்டு குமார்?

பிஹாரின் நாளந்தா மாவட்​டத்​தில் உள்ள ஹர்​னாட் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜண்டு குமார். ஐந்து வயதில் போலியோ​வால் பாதிக்​கப்​பட்ட பிறகு, தனது குடும்​பத்​தைக் காப்​பாற்​று​வதற்​காக பெற்​றோருக்​குக் காய்​கறி விற்க உதவி வந்​துள்​ளார்.

ஜண்டு குமார் ஆரம்​பத்​தில் குண்டு எறிதல் மற்​றும் ஈட்டி எறிதல் போட்​டிகளில் ஈடு​படு​வதற்கு முன்​பு, தனது பலத்​தைப் பெருக்​கு​வதற்​காக 2010 மற்​றும் 2012-ம் ஆண்​டுக்கு இடைப்​பட்ட காலத்​தில் எடை பயிற்​சி​யைத் தொடங்கி உள்​ளார். இதில் ஈடு​பாடு அதி​க​மானதை தொடர்ந்து பாரா வலுதூக்​குதல் விளை​யாட்டை நோக்கி தனது பாதையை கட்​டமைத்து தற்​போது இந்​தி​யா​வுக்கு பதக்​கம் வென்று கொடுத்​துள்​ளார்.

மகளிருக்​கான ஹெவிவெ​யிட் இறு​திப்​போட்​டி​யில் கஸ்​தூரி ராஜாமணி தனது மூன்று முயற்​சிகளி​லுமே தோல்​வியடைந்​தார். மகளிருக்​கான லைட்​வெ​யிட் இறு​திப்​போட்​டி​யில் ஜஸ்ப்​ரீத் கவுர் மற்​றும் சுமன் தேவி ஆகியோ​ரால் பதக்​கங்​களை வெல்ல முடி​யாமல் போனது.

வீல்​சேர் கூடைப்​பந்து

மகளிருக்​கான வீல்​சேர் 3x3 கூடைப்​பந்து போட்​டி​யில் இந்​திய அணி 1-16 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வேல்ஸ் அணி​யிடம் தோல்வி அடைந்​தது.

நீச்சலில் ஏமாற்றம்

நீச்சலில் ஆடவருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு ஹீட்ஸில் இந்தியாவின் தக்‌ஷன் சசிகுமார் பந்தய தூரத்தை 3:58.09 விநாடிகளில் கடந்து 15-வது இடத்தையும், ஆர்யன் நேஹ்ரா 4:00.26 விநாடிகளில் கடந்து 16-வது இடத்தையும் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். இந்த பிரிவில் மொத்தம் 27 பேர் கலந்து கொண்டனர்.

குத்​துச்​சண்டையில் சச்சின் சிவாச் அசத்தல்

ஆடவருக்கான குத்​துச்​சண்டை 55 கிலோ எடைப் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் சச்​சின் சிவாச், கனடா​வின் கியோமா அல்​-அஹ்ம​தி​யாவை எதிர்த்து விளை​யாடி​னார். இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் ஸ்பெ​யினில் நடை​பெற்ற பாக்​சம் தொடரிலும், கடந்த ஆண்டு கஜகஸ்​தானில் நடை​பெற்ற உலகக் கோப்​பை​யிலும் அல்​-அஹ்ம​தி​யாவை சச்​சின் சிவாச் தோற்​கடித்​திருந்​தார். இதனால் இம்​முறை இவர்​களுக்கு இடையி​லான மோதல் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது.

இதில் சச்​சின் சிவாச் மீண்​டும் ஒரு முறை தனது அனுபவத்​தால் ஆதிக்​கம் செலுத்தி ஸ்பிளிட் முடி​வின்​படி 4-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறி​னார். 26 வயதாகும் சச்​சின் சிவாச் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இங்​கிலாந்​தின் வில்​லி​யம் ஹெவிட்​டுடன்​ மோதுகிறார்​.

லான் பவுல்: அரை இறுதி வாய்ப்பு தக்கவைப்பு

லான் பவுல் போட்​டி​யில் மகளிர் அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் ரூபா ராணி திர்​கே, பிங்கி சிங் ஜோடி​யானது டோங்கா அணி​யின் பாரிஸ் பேக்​கர், மிலிகா நாதன் ஜோடியை எதிர்​கொண்​டது. முதல் செட்டை இந்​திய ஜோடி 5-2 என வென்​றது. 2-வது செட்டை டோங்கா ஜோடி 6-4 என கைப்​பற்​றியது. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க நடத்​தப்​பட்ட டை பிரேக்​கரில் இந்​திய ஜோடி 2-0 என வெற்றி பெற்​றது. இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை தக்​க​வைத்​துக் கொண்​டது.

ஜிம்​னாஸ்​டிக்ஸில் தபான் முன்னேற்றம்

ஆடவருக்​கான ஆர்​டிஸ்​டிக் ஜிம்​னாஸ்​டிக்​கில் இந்​தி​யா​வின் தபான் மொகந்தி 17-வது இடத்​தை​யும், யோகேஷ்வர் சிங் 18-வது இடத்​தை​யும் பிடித்து ஆல் ரவுண்ட் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறினர். தபான் மொகந்தி 71.700 புள்​ளி​களை​யும், யோகேஷ்வர் சிங் 71.400 புள்​ளி​களை​யும் பெற்று 24 பேர் பங்​கேற்​கும் இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றுள்​ளனர். ஆடவருக்​கான அணி​கள் பிரி​வில் இந்​தியா 208.550 புள்​ளி​கள் பெற்று 7-வது இடம் பிடித்​தது. கனடா அணி 241.400 புள்​ளி​களு​டன் தங்​கப் பதக்​கம் வென்​றது. இங்​கிலாந்து (238.250) வெள்​ளிப் பதக்​க​மும், ஆஸ்​திரேலியா (235.650) வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றியது.

SCROLL FOR NEXT