கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ள ஓவோ ஹைட்ரோ மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவானது இசை மற்றும் ஸ்காட்லாந்து பாரம்பரியப் பெருமைகள் நிறைந்த வண்ணங்களின் கலவையாக மாறியிருந்தது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரசி கமிலா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மூன்றாம் சார்லஸ் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடக்க விழாவானது பிரம்மாண்டமான திறந்தவெளி மைதான நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டு 14,300 பேர் அமரக்கூடிய உள்அரங்கிற்குள்ளேயே முழுமையாக நடத்தப்பட்டது. இந்த முறையில் தொடக்க விழா நடத்தப்படுவது காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.
மற்றொரு முன்னோடி நிகழ்வாக, 74 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் அணிவகுத்து வருவதற்குப் பதிலாக, தொடக்கத்திலேயே அரங்கிற்குள் அணிவகுத்து வந்தனர். இந்திய தேசியக் கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் ஏந்தி வந்தனர். இந்திய வீரர்கள் அடர் நீல நிற சூட்களிலும், வீராங்கனைகள் புடவை மற்றும் பிளேசர்கள் அணிந்திருந்தனர்.
போட்டியின் 2-வது நாளான நேற்று நீச்சலில் ஆடவருக்கான 50 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவு ஹீட்ஸில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பந்தய தூரத்தை 25.52 விநாடிகளில் கடந்து தனது பிரிவில் 8-வது இடம் பிடித்தார். அதேவேளையில் ஒட்டுமொத்தமாக பெர்முடாவின் ஜேக் ஹார்வியுடன் 14-வது இடத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ரீஹரி நடராஜ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஹீட்ஸில் 16 இடங்களுக்குள் வருபவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
பாரா நீச்சலில் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ் 13 பிரிவில் இந்தியாவின் புதிகினா, இமாம் அலி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். புதிகினா தனது ஹீட்ஸில் பந்தய தூரத்தை 57.10 விநாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்திருந்தார். இமாம் அலி பந்தய தூரத்தை 1:05.32 விநாடிகளில் அடைந்திருந்தார்.
துலிகா மான் நீக்கம்
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜூடோ வீராங்கனையான துலிகா மான் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் விதிமுறைகளின்படி, 12 மாத காலத்துக்குள் 3 முறை சோதனைக்கான இருப்பிட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதை செய்யத் தவறியதால் துலிகா மான் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆடவர் அணியில் அருண் குமார் நீக்கப்பட்ட நிலையில் தற்போது பதக்கம் வெல்லக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமான துலிகா மானும் நீக்கப்பட்டுள்ளார்.