துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் 2 இடங்கள் பின்தங்கி 9-வது இடத்தில் உள்ளார். இலங்கை டெஸ்ட் தொடரில் 3 இன்னிங்ஸ்களில் பேட் செய்த ஷுப்மன் கில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 7-வது இடத்தில் உள்ளார். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 11-வது இடத்தில் தொடர்கிறார். அதேவேளையில் 2 சதங்களுடன் 348 ரன்கள் குவித்த பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் 5 இடங்கள் முன்னேறி 54-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்திலும், நியூஸிலாந்தின் மேட் ஹென்றி 2-வது இடத்திலும் உள்ளனர். இலங்கை அணியின் சோனல் தினுஷா 29 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.