புதுடெல்லி: இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டித் தொடருக்காக, கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ தளம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) ரூ. 270 கோடி மதிப்பிலான ஸ்பான் சர்ஷிப் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இது ஐபிஎல் தொடரின் உலகளாவிய செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது” என்றார். கடந்த ஆண்டு ‘ட்ரீம் 11’ போன்ற ஆன்லைன் விளையாட்டுத் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, ஐபிஎல் போட்டிகளுக்கு புதிதாக ஜெர்சி ஸ்பான்சரைத் தேட வேண்டிய சூழல் பிசிசிஐ-க்கு ஏற்பட்டது. பின்னர், ட்ரீம் 11-க்கு பதிலாக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் ரூ. 579 கோடிக்கு ஜெர்சி ஸ்பான்சர் உரிமையைப் பெற்றது.
உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடரான ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை டாடா குழுமம் தன்வசம் வைத்துள்ளது. தற்போது ‘ஜெமினி’ நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், இந்திய கிரிக்கெட்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனங்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.