>> இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேல் உடல் நலமின்மை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரின் கடைசி இரு ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.
>> இந்திய அணிக்காக விளையாடும் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் வரும் 24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் குறைந்தது 2 ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும் என பிசிசிஐ நிபந்தனை விதித்துள்ளது.
>> தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாகர். மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 36 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
>> ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி அடிலெய்டில் நாளை (17-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து வாரியம் நேற்று அறிவித்தது. இதில் கஸ் அட்கின்சன் நீக்கப்பட்டு ஜோஷ் டங் சேர்க்கப்பட்டுள்ளார்.
>> நவம்பர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இந்திய அணியின் ஷபாலி வர்மாவை ஐசிசி தேர்வு செய்துள்ளது.
>> நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி மவுன்ட்மவுங்கனியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான நியூஸிலாந்து அணியில் 37 வயதான சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.